நித்தியானந்தா ஆசிரமத்தில் இளம் பெண் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்!

நவம்பர் 26, 2019 267

திருச்சி (26 நவ 2019): நித்தியானந்தா ஆசிரமத்தில் திருச்சி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உயிரிழந்த பெண்ணின் தாய் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுணன் - ஜான்சிராணி தம்பதியின் 3-வது மகள் சங்கீதா. இவரது மூத்த சகோதரி விஜி மஞ்சள் காமாலை நோயினால் கடந்த 2010-ம் ஆண்டு உயிரிழந்தார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த சங்கீதா பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் 2010-ம் ஆண்டு தியான வகுப்பில் சேர்ந்தார். பின்னர் அங்கேயே தங்கி பணியாற்றினார். கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி சங்கீதா மர்மமான முறையில் உயிரிழந்தார்.

சங்கீதாவை ஆசிரமத்தில் துன்புறுத்தி, கொலை செய்துள்ளதாக பெங்களூரு ராம் நகர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

தொடர்ந்து திருச்சி நவலூர் குட்டப்பட்டில் அடக்கம் செய்யப்பட்ட சங்கீதா உடல் 2015-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சங்கீதா இறப்பையடுத்து மன உளைச்சலடைந்த அவரது தந்தையும் உயிரிழந்தார்.

சங்கீதா இறப்பு குறித்த வழக்கு விசாரணை பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கை பெங்களூரு போலீஸ் சரியாக விசாரணை நடத்தவில்லை. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சங்கீதாவின் தாயார் ஜான்சிராணி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஆசிரமத்தில் உள்ள பலரும் மிரட்டி துன்புறுத்தப்படுகிறார்கள். கொலை செய்யப்படுகிறார்கள். எனவே அங்குள்ள பெண்கள், குழந்தைகள் அனைவரையும் மீட்க வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அழைத்து வர வேண்டும் என்றும் ஜான்சிராணி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...