வாழ்க்கையை அனுபவிக்கணும் அதற்காகத்தான் செய்தேன் - காலேஜ் இளம் பெண்ணின் வாக்குமூலம்!

நவம்பர் 27, 2019 394

சென்னை (27நவ 2019): காலையில் கல்லூரிக்குச் சென்று மாலையில் இந்த வேலையை செய்துள்ளார் சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர்.

சென்னை மின்சார ரயில்களில் திருட்டுச் சம்பவங்கள் வித்தியாசம் வித்தியாசமாக நடந்துகொண்டிருக்கின்றன. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடுபவர்களைவிட அன்பாகப் பேசி திருடுபவர்கள் குறித்த தகவல்கள் ரயில்வே போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பயணிகளிடம் திருடுவதற்காகவே வேலூரிலிருந்து சென்னை வந்த தேவி என்ற பெண்ணை சமீபத்தில் எழும்பூர் போலீஸார் கைது செய்து 70 சவரன் தங்க நகைகளையும் 75,000 ரூபாயையும் பறிமுதல் செய்தனர். தேவி கைதுக்குப் பிறகும் திருட்டுச் சம்பவங்கள் குறையவில்லை

சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் செல்லும் மின்சார ரயில்களில் காலை, மாலை நேரங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். இந்தக் கூட்ட நெரிசலைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி தொடர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்துள்ளார், சென்னை பிரபல கல்லூரியில் பயிலும் மாணவி மோகனப்பிரியா.

கடந்த சில நாட்களாக மின்சார ரெயிலில் திருட்டுப் போவதாக ரயில்வே போலீஸாரிடம் பயணிகள் புகார்கள் கொடுத்தனர். குறிப்பாக, மகளிர் ரயில் பெட்டியில்தான் திருட்டுச் சம்பவங்கள் அதிகமாக நடப்பதாக போலீஸாருக்குப் பெண்கள் புகார் கொடுத்திருந்தனர். இதனால் இந்த வழித்தடத்தில் மகளிர் பெட்டியில் ரயில்வே பெண் போலீஸார், சீருடை அணியாமல் சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு இளம்பெண்ணின் நடவடிக்கையில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணை ரயில்வே போலீஸார் தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது அந்தப் பெண், கூட்டமான மகளிர் ரயில்பெட்டியின் இருக்கையில் அமர்ந்திருந்தபடி, நின்றுகொண்டிருக்கும் பெண்களிடம் `உங்களின் ஹேண்ட் பேக்கைக் கொடுங்கள், எதற்கு சிரமப்படுகிறீர்கள், நான் பத்திரமாக வைத்துக்கொள்கிறேன்' என்று அன்பாகக் கேட்டதை போலீஸார் கவனித்தனர். பிறகு அந்தப் பெண்ணையே போலீஸார் கண்காணித்தபோது, ஹேண்ட் பேக்கில் இருக்கும் பர்ஸ், செல்போன் ஆகியவற்றை எடுத்ததையும் போலீஸார் பார்த்தனர்.

இதையடுத்து அந்தப் பெண்ணை மடக்கிப்பிடித்த போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர். விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் மோகனப்பிரியா என்றும் கல்லூரிக்கு காலையில் கடற்கரை - தாம்பரம் வழித்தட மின்சார ரயிலில் சீஸன் டிக்கெட் எடுத்து பயணம் செய்துவந்துள்ளார். கல்லூரி மாணவி என்பதால் டிப்டாப்பாக அவர் உடை அணிந்துள்ளார். இதனால் மோகனப்பிரியா மீது பயணிகள் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. மேலும், மகளிர் பெட்டியில் ஏறும் மோகனப்பிரியா, உதவி செய்வதுபோல இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்துள்ளார். காலையில் கல்லூரிக்கும் மாலையில் திருட்டுச் சம்பவத்திலும் ஈடுபட்டுவந்த மோகனப்பிரியா. ஆடம்பவர வாழ்க்கையை அனுபவிப்பதற்காகவே இதனை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் இவரின் பின்னணி குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...