உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு!

டிசம்பர் 02, 2019 241

சென்னை (02 டிச 2019): தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் தேதி திங்கள்கிழமை (டிச. 2) காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும். இதற்கான தேர்தல் அறிவிக்கை டிசம்பர் 06-ஆம் தேதி வெளியிடப்படும், மேலும் அன்றைய தினம் முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும்.

வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள் டிசம்பர் 13-ஆம் தேதியும், வேட்புமனு ஆய்வு 16-ஆம் தேதியும், வேட்புமனு திரும்பப்பெறுவது 18-ஆம் தேதியும் நடைபெறும். வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 02.1.2020-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

கிராம உள்ளாட்சி தேர்தல் வழக்கம்போல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும். ஊராட்சி பதவிகளுக்கு 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படும். 870 தேர்தல் அலுவலர்களும், 16,840 தேர்தல் பார்வையாளர்களும் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

தேசிய தகவல் மையத்துடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. முதல்கட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். 2-ஆம் கட்ட தேர்தலில் 1 கோடியே 67 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு சின்னங்கள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்தல் நடவடிக்கை 04.01.2019-ஆம் தேதி முடிவடையும். வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள், கிராம உறுப்பினர்கள் 06.01.2019 அன்று பதவியேற்பார்கள். மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி ஆகியவற்றின் மறைமுக தேர்தல் 11.01.2020-ஆம் தேதி நடத்தப்படும்.

புதிய மாவட்டங்களைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்ற ஆணை உள்ளதால், ஏற்கனவே உள்ள நடைமுறை பின்பற்றப்படும். புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை தேவைப்பட்டால் தேர்தலுக்கு பின் நடத்தப்படும். தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை ஒப்படைக்காவிட்டால் 3 ஆண்டுகள் போட்டியிட முடியாது.

நிர்வாக காரணங்களுக்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...