தமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை!

சென்னை (28 மே 2020): தமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 18 ஆயிரத்து 545 பேர் கொரோனா நோய் தொற்று உறுதியானதாகவும் அறிக்கை வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 508 ஆண்களும், 309 பெண்கள் என 817 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 137 பேர் அடங்குவர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 545 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 567 பேர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 9 ஆயிரத்து 909 பேர் மருத்துவமனைகளில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி உள்ளனர். மேலும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 500 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 ஆயிரத்து 771 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

தமிழகத்தில் 6 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவள்ளூரைச் சேர்ந்த 51 வயது ஆண் உட்பட, சென்னையை சேர்ந்த 39, 51, 79 வயது ஆணும், 54 வயது பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 74 வயது பெண்ணும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 21 மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 558 பேரும், கள்ளக்குறிச்சியில் 74 பேரும், திருவள்ளூரில் 40 பேரும், செங்கல்பட்டில் 31 பேரும், திருவண்ணாமலையில் 21 பேரும், காஞ்சிபுரத்தில் 14 பேரும், மதுரையில் 8 பேரும், தூத்துக்குடியில் 7 பேரும், அரியலூர், விழுப்புரம், திருவாரூரில் தலா 5 பேரும், நெல்லையில் 4 பேரும், திருச்சி, கடலூரில் தலா 3 பேரும், சிவகங்கையில் 2 பேரும், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருப்பத்தூரில் தலா ஒருவர் கொரோனா நோய் தொற்றால் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்தவர்களில் இதுவரை 86 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் வந்தவர்களில் இதுவரை 67 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

தமிழகத்தில் 10 ஆயிரத்து 661 பேருக்கு தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்: