எடப்பாடிக்கு எதிராக களமிறங்கிய 50 அதிமுக எம்.எல்.ஏக்கள் – சிக்கித்தவிக்கும் முதல்வர்!

Share this News:

சென்னை (19 மார்ச் 2021): அ.தி.மு.க.,வில், 50 எம்.எல்.ஏ.,களுக்கு, ‘சீட்’ வழங்கவில்லை. இவர்கள் அனைவரும் எடப்பாடிக்கு எதிராக களமிறங்கியுள்ளனர்.

சிலர் கட்சியை விட்டு விலகி வேறு கட்சிகளுக்கு தாவிவிட்டனர். சிலர் அதிமுகவை எதிர்த்து சுயேட்சையாக களம் காணுகின்றனர். சிலர்  தங்களது ஆதரவாளர்களுடன் கட்சிக்குள் இருந்துகொண்டே அதிமுகவை கவிழ்த்த உள் குத்து வேலைகளில் இறங்கிவிட்டனர்.

சாத்துார் எம்.எல்.ஏ., ராஜவர்மன், உடனடியாக, தினகரன் பக்கம் சாய்ந்தார். அங்கே, ‘சீட்’ வாங்கி, சாத்துாரில் ஆளும் கட்சியை எதிர்த்து நிற்கிறார். வீதி வீதியாக போய், அமைச்சர்களுக்கு எதிராக பேசி வருகிறார். அமைச்சர்கள் வேலுமணியும், ராஜேந்திரபாலாஜியும் சொத்து குவித்துள்ளதாக குற்றம் சாட்டுகிறார்.

சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., சந்திரசேகரன், தனக்குதான், ‘சீட்’ என நம்பினார். கொல்லிமலை ஒன்றிய மீனவர் பிரிவு செயலர் சந்திரனுக்கு கொடுத்ததும் இவருக்கு கோபம். ஆதரவாளர்களுடன், போராட்டத்தில் ஈடுபட்டார்; தலைமை கண்டுகொள்ள வில்லை. விரக்தி அடைந்த சந்திரசேகரன், சுயேச்சையாக களம் இறங்கி விட்டார். இவர் அமைச்சர் தங்கமணியை தாக்கி பிரசாரம் செய்வதோடு, அமைச்சரின் ஆதரவாளர்களால், தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளார்.

பெருந்துறையில், 10 ஆண்டுகளாக, எம்.எல்.ஏ.,வாக இருந்த தோப்பு வெங்கடாசலம் அவருக்கும். இம்முறை, ‘சீட்’ இல்லை. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமாருக்கு வாய்ப்பு. தனக்கு, ‘சீட்’ தராதது ஏன் என்று, கதறி அழுதார். பலன் இல்லை என்றதும், சுயேச்சையாக வேட்பு மனு போட்டு விட்டார்.

அறந்தாங்கி எம்.எல்.ஏ., ரத்தினசபாபதி, தினகரன் ஆதரவாளராக இருந்தார். பின், இ.பி.எஸ்., முகாமுக்கு திரும்பினார். என்றாலும், அவருக்கு, ‘சீட்’ இல்லை. முன்னாள் எம்.எல்.ஏ., ராஜநாயகத்திற்கு, வழங்கப்பட்டுள்ளது.விரக்தி அடைந்த ரத்தினசபாபதி, அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பாய்கிறார்.

பண்ருட்டி எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம், அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிராக, அரசியல் செய்து வந்தார். அதனால், ‘சீட்’ இழந்தார். விரக்தியில் அரசியலை விட்டே விலகுவதாக அறிவித்துள்ளார். இப்படி இன்னும் சிலர், ‘சீட்’ கிடைக்காத கோபத்தில், கட்சிக்கு எதிராக திரும்பி உள்ளனர்.

 ஏற்கனவே திமுக அலை வீசிவரும் நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பம் அதிமுக எதிர்பார்க்கும் கொஞ்ச நஞ்ச வெற்றியும் கேள்விக்குறியாகியுள்ளது.


Share this News:

Leave a Reply