தஞ்சையில் ஒரே பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு – பள்ளி மூடல்!

Share this News:

தஞ்சாவூர் (14 மார்ச் 2021): தஞ்சசை மாவட்டம் அம்மாபேட்டை பள்ளி ஒன்றில் 56 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தற்போது 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாமல் காய்ச்சல் ஏற்பட்டதால் சக மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி கடந்த 11-ம் தேதி பள்ளியில் பயிலும் 460 மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20 மாணவிகளுக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து 16 மாணவிகள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 4 மாணவிகள் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 12-ம் தேதி மாணவிகள் 619 பேருக்கும், ஆசிரியைகள் 35 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவிகள் 56 பேருக்கும், ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பள்ளியில் உள்ள அனைத்து அறைகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிக்கு இருவார காலம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் 9 ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 1100 மாணவிகள் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply