கொரோனா நடவடிக்கை என்ற பெயரில் காயல் பட்டினம் முஸ்லிம் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!

Share this News:

தூத்துக்குடி (29 ஜூன் 2020): சாத்தான்குளம் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தூத்துக்குடியில் போலீசாரின் அடக்குமுறையால் அடுத்த அதிர்ச்சி தரும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த ஜூன் 9ம் தேதியன்று காயல்பட்டினம் குத்துக்கல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாட்டு பகுதி வழியாக, ஹபீப் முஹம்மது என்ற முஸ்லிம் இளைஞர் முகக்கவசம் அணியாமல் சென்றிருக்கிறார். அதன் காரணமாக ஹபீப்பை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற ஆறுமுகநேரி போலிஸார் அவரை கடுமையான முறையில் சித்திரவதை செய்து தாக்குதலுக்கு ஆளாக்கியுள்ளார்கள்.

இதனால் படுகாயம் அடைந்த ஹபீப் முஹம்மது, காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சென்று தனக்கு எவ்வாறு இந்த காயங்கள் ஏற்பட்டன என்பதனை தெரிவித்து சிகிச்சை பெற்றுள்ளார். காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் விபத்துகள் பதிவேட்டில் ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் 4 பேர் சேர்ந்து தாக்குதல் நடத்தியதாக ஹபீப் கூறியது பதிவாகியுள்ளது.

இந்நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் ஹபீப் முகமது குடும்பத்தினரை மிரட்டி மருத்துவ உதவி கிடைக்கச் செய்யாத சூழலை உருவாக்கியுள்ளனர். தொடர்ந்து சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினரின் நிர்பந்தத்தினால் ஹபீப் முகமதுவை அழைத்துச் செல்லாமல் ஆம்புலன்ஸ் திரும்பி சென்றுள்ளது.

தற்போது ஹபீப் முஹம்மது நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

இளைஞர் ஹபீப் முஹம்மது மீதான தாக்குதல் குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா நடவடிக்கை என்ற பெயரில் தூத்துக்குடியில் காவல்துறையினரின் அடக்குமுறைகள் எல்லை மீறி செல்வதாக பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர்.


Share this News: