உட்கார் என்ற அன்பழகன் – தடை விதித்த சபாநாயகர்!

Share this News:

சென்னை (07 ஜன 2020): உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை திமுக எம்.எல்.ஏ அன்பழகன் ஒருமையில் பேசியதால் இந்த கூட்டத் தொடர் முழுவதும் அன்பழகனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்தின்போது திமுக, அதிமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் போது பேசிய திமுக MLA ஜெ.அன்பழகன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றம்சாட்டினார்.

அவரது குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதல்வர், சட்டம் ஒழுங்கில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளதாகவும், இதை மத்திய அரசு சொல்வதாகவும் குறிப்பிட்டார். சட்டம் ஒழுங்கு சரியில்லை என திமுக உறுப்பினர் ஆதாரத்துடன் சொல்ல முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதன்போது அமைச்சரைப் பார்த்து ஜெ.அன்பழகன், ஒருமையில் பேசியதால், அவரை அவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது. இதனிடையே ஜெ.அன்பழகனை வெளியேற்றுவது தொடர்பான தீர்மானத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்தார்.

அப்போது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை உறுப்பினர் ஜெ.அன்பழகன் ‘உட்கார்’ என ஒருமையில் பேசுவதும் தவறு என சபாநாயகர் தனபால் சுட்டிக்காட்டினார். இதையடுத்து பேசிய சபாநாயகர், ‘உறுப்பினர் அன்பழகனுக்கு இது கடைசி வாய்ப்பு. அவையில் இனி இப்படி நடந்துகொண்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது நடைப்பெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் திமுக MLA ஜெ.அன்பழகன் பங்கேற்க சபாநாயகர் தனபால் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Share this News:

Leave a Reply