அரியலூர் மாணவி தற்கொலை – பெற்றோரிடம் ரகசிய வாக்குமூலம்!

தஞ்சாவூர் (24 ஜன 2022): அரியலூரைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி தஞ்சையில் தனியார் பள்ளி விடுதியில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரது பெற்றோர் தஞ்சை நீதித்துறை நடுவர் முன் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.
மாணவியின் தற்கொலைக்கு மதம் மாற கட்டாயப்படுத்தியதே காரணம் என எழுந்த குற்றச்சாட்டை காவல்துறையினர் ஏற்கனவே மறுத்திருந்தனர். இந்நிலையில், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி அவரது தந்தை தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுகொள்ளவேண்டும் என உத்தரவிட்டதுடன் பெற்றோர் தஞ்சை நீதித்துறை நடுவர் முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவேண்டும் என்றும் ஆணையிட்டிருந்தது.
இதன்படி மாணவியின் தந்தை முருகானந்தம் மற்றும் சித்தி சரண்யா ஆகியோர் தஞ்சை 3வது நீதித்துறை நடுவர் பாரதியின் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இருவரிடமும் நீதிபதி தனித் தனியாக வாக்குமூலம் பெற்றார். இருவரின் வாக்குமூலமும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்குமூலம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சீலிட்ட உறையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

ஹாட் நியூஸ்: