கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதன் பின்னணி என்ன?

Share this News:

கொல்கத்தா (04 செப் 2020): பாஜகவின் மேற்கு வங்க துணை செயலாளரான அர்ஜூன் சிங் செப்டம்பர் 1 அன்று ஒரு ட்வீட் செய்துள்ளார்

அதில் அவர் ; தீதியின் (மம்தா பானர்ஜி) அரசியலின் ஜிஹாதி இயல்பு, இப்போது இந்து மதத்தையும் அதன் கலாச்சாரத்தையும் அழிப்பதில் நரகமாக உள்ளது. மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் பகுதியில் ஒரு மதக் குழு ஒரு கோவிலைத் தாக்கி அழித்து மா காலியின் சிலையை எவ்வாறு எரித்தது என்பதைப் பாருங்கள். என்று எரிந்த நிலையிலுள்ள காலியின் படத்தை பதிவிட்டுள்ளார்.

காளி கோயிலின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதற்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்றும் அதற்கு மம்தா பானர்ஜியின் ஆதரவு உள்ளது என்றும் பாெய்யான அவதூறான செய்தியை திட்டமிட்டு பரப்பிவிட்டார் அர்ஜூன சிங்.

இந்த ட்வீட் பலரால் லைக் செய்யப்பட்டது மற்றும் 1000க்கும் மேற்பட்டோர் ரீட்வீட் செய்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக பங்களாதேஷைச் சார்ந்த எழுத்தாளரும் இந்து செயற்பாட்டாளருமான ராஜு தாஸ் என்பவர் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில்,

நேற்றிரவு முர்ஷிதாபாத்தில் உள்ள நவோடா வின் ஆலம்பூர் கிராமத்தில் உள்ள ஒரு காளி கோவிலில் ஒரு காளி சிலைக்கு குற்றவாளிகள் தீ வைத்தனர். ஆரம்பத்தில், அதே கோவிலில் இருந்து சிலையின் தங்க ஆபரணங்கள் திருடப்பட்டன. ஆலம்பூர் ஒரு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி. வெவ்வேறு நேரங்களில் இந்துக்கள் தங்கள் மதத்தை கடைப்பிடிப்பதில் தடைகளை எதிர்கொள்கிறார்கள் என்று ராஜு தாஸ் ட்வீட் செய்துள்ளார்.

இதில் முஸ்லிம்கள்தான் சிலையை சேதப்படுத்தியதாக அர்ஜுன் சிங் பரப்பிய வதந்தியை மறுபடியும் பரப்பினார் ராஜூதாஸ்.

உண்மை என்ன?

இது தொடர்பாக ஆலம்பூர் காளி கோயிலின் செயலாளரான சுக்தேவ் பாஜ்பாய் கூறுகையில் ; காளி மாவின் சிலை நெருப்பில் விழுந்து தீ பிடித்தது. இப்பகுதியின் இந்துக்களும் முஸ்லிம்களும் சமாதானமாக இணைந்திருக்கிறார்கள், நல்லுறவைக் கொண்டுள்ளனர். கோயிலின் பூட்டுகள் உடைக்கப்படவில்லை, இது ஒருவித விபத்து. ஆனால் சிலர் இலக்கு வைக்கப்பட்ட வெறுப்புணர்வை பரப்புவதன் மூலம் இதற்கு இனவாத நிறத்தை கொடுக்க முயற்சிக்கின்றனர் ”, என்று பாஜ்பாய் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முர்ஷிதாபாத் காவல் துறை அர்ஜூன்சிங்கின் ட்வீட்டிற்கு பதிலளித்து ட்வீட் செய்தது. அதில், இந்த தீக்காயம் ஒரு விபத்துதான். உண்மைகளை அறியாமல் இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று தெரிலிக்கப்பட்டுள்ளது.

பாஜகவினரின் இதுபோன்ற மனித விரோத செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எப்படியாவது கலவரத்தை தூண்டி அரசியல் லாபம் அடையலாம் என்பதில் குறியாய் இருக்கின்றனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மதக்கவவரத்தை தூண்டுவதற்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற வதந்திகளையும், வெறுப்பு பிரச்சாரங்களை செய்பவர்களையும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Share this News:

Leave a Reply