சீமான் மீது தேச துரோக வழக்கு – கோவையில் அப்படி என்ன பேசினார்?

Share this News:

கோவை (09 மே 2020): நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 22ம் தேதி கோவை ஆத்துப்பாலம் பகுதியில் நடந்த “ஷாகின்பாக்” போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சீமான், சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் சட்டங்களுக்கு எதிராக பேசியிருந்தார்.

அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர் 72 ஆண்டுகால இந்தியாவில் பல அரசுகள் ஆண்டு இருக்கின்றன எனவும் இத்தனை ஆண்டுகளில் யார் இந்தியன் என்று கூட தெரியாமல் இருந்திருக்கின்றனர் என பேசி இருந்தார்.

இந்தியா என்ற நாடு எப்போதும் இருந்ததில்லை, இனியும் இருக்க போவதில்லை என தந்தை பெரியார் சொன்னார். வழக்கு போடுவது என்றால் பெரியார் மீது போட்டு விட்டு அப்புறம் என மீது போடட்டும் என தெரிவித்தார்.

இந்திய குடிமகன் என்பதற்கு எதையெல்லாம் காட்ட வேண்டும் என்பதை இந்த அரசு சொல்ல வில்லை எனக்கூறிய அவர் இந்திய குடியுரிமைக்கு பெற்றோரின் பிறப்பு சான்றிதழையும் காட்ட வேண்டும் என்கின்றனர் எனவும் எனக்கு சான்றிதழ் இருக்கின்றது என் பெற்றோருக்கு சான்றிதழ் இல்லை என தெரிவித்தார்.

ஏர்வாடியில் அடைத்து வைத்துள்ள பைத்தியக்காரன் கூட இந்த மாதிரி செய்ய மாட்டார்கள் எனவும் நாட்டை இப்படி பதட்டமாக வைத்திருப்தால் இந்தியன் ஏர்லைன்ஸ்,எல்.ஐ.சி விற்பனைக்கு வந்ததை யாரும் பேச வில்லை எனவும் குடியுரிமை பிரச்சினை ஆட்சியாளர்களுக்கு தேவைப்படுகின்றது இதை வைத்து மக்களை திசை திருப்புகின்றனர் என தெரிவித்தார்.

சி.ஏ.ஏ இஸ்லாமியர் மக்களுக்கு எதிரானது அல்ல ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரானது என பேசிய அவர் பிரதமர் மோடி, அமித்ஷா,மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை முதலில் குடியுரிமை சான்றிதழை காட்ட சொல்லி இனி போராட வேண்டும் என கூறிய சீமான் இவர்களை போல பிராடுகாரர்கள் யாரும் இருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

நெல்லையில் தன்னை ஒன்றரை மாதமாக நுழைய விடாமல் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க வினர் தடுக்கின்றனர். கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியினர் கல்லூரி விழாவில் பேசவிடாமல் தடுக்கின்றனர் என கூறியிருந்தார். காங்கிரஸ், பாஜக இவர்கள் இருவருக்கும் எந்த வித்தியாசம் கிடையாது என கூறியவர்

நீட், ஜி.எஸ்.டி, ஓரே நாடு ஓரே இந்தியா, என்.பி.ஆர், சி.ஏ.ஏ இவற்றை எல்லாம் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி எனவும் இவற்றை ஆதரித்தது தி.மு.க எனவும் குற்றம்சாட்டினார்.

பெரும்பான்மை இல்லாததால் அவர்கள் இதை நிறைவேற்றவில்லை என்ற சீமான் பா.ஜ.கவிடம் பெரும்பான்மை இருந்ததால் நிறைவேற்றி இருக்கின்றனர் என தெரிவித்தார்.

இதே போல பாபர் மசூதியை இடித்தது பா.ஜ.க எனவும், அதை இடிக்க அனுமதித்தது காங்கிரஸ் எனவும், இடிக்கும் வரை அனுமதித்தது காங்கிரஸ் கட்சிதான் இதை யாராலும் மறுக்க முடியாது எனவும் தெரிவித்தார். மேலும் மாநில சுயாட்சி பேசும் திமுக, காஷ்மீரை இரண்டாக உடைத்த போது திமுக தலைவர் ஸ்டாலின் இதை ஆதரிக்கின்றார் எனவும் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு வந்த போது ஆர்.எஸ்.எஸ் அறிக்கையும் திமுக தலைவரின் அறிக்கையும் ஒரே மாதிரி இருந்தது எனவும் தெரிவித்தார்.

குடியுரிமை சான்றிதழை அவர்கள் கேட்க போவதில்லை நாமும் கொடுக்க போவதில்லை என கூறிய அவர் குடியுரிமை சான்றிதழ் கேட்க போவதில்லை என்று பாதி இந்திய மாநிலங்கள் சொல்லி விட்டது எனவும் தெரிவித்தார்.

சி.ஏ.ஏ சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்கின்றார். கொரோனா வைரஸ் தமிழகத்தில் வரவில்லை ஆனால் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்கின்றோம். அது போலவே சி.ஏ.ஏ வந்தால் பாதிப்பு என்பதால் எதிர்கின்றோம் என பேசிய சீமான் தமிழர்கள்தான் இஸ்லாத்தை ஏற்று இருக்கின்றனர். இங்கு யாரும் முகலாயர்களின் வாரிசுகள் அல்ல எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் சீமான் மீது 124 (ஏ) தேசதுரோக வழக்கு ,153(ஏ) விரோத உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய இரு பிரிவுகளில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Share this News: