பிஞ்சு மனதில் சாதி வெறி – பள்ளி மாணவர்களிடையே நடந்த மோதலில் ஒரு மாணவர் பலி!

677

திருநெல்வேலி (30 ஏப் 2022): நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை அடுத்துள்ள பள்ளக்கால் புதுக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த சில வாரமாக +2 மாணவர்கள், தங்கள் சமூகத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் சாதிக்கயிறு கட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. +2 மாணவர்கள் சிலர், இந்த விவகாரத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு உள்ளனர்.

அந்த சமயத்தில். +2 மாணவர் ஒருவர் மற்றொரு பிரிவினர் உடன் தனியாகச் சிக்கியுள்ளார், இதையடுத்து தனியாகச் சிக்கிக் கொண்ட அந்த மாணவரை மற்றொரு பிரிவினர் கொடூரமாகத் தாக்கி உள்ளனர். மேலும், அங்கிருந்த கற்களைக் கொண்டும் அந்த மாணவரைத் தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த மாணவர், சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அந்த மாணவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைப் படிச்சீங்களா?:  பஜகவிலிருந்து விலகுவதாக தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு!

சாதி ரீதியான மோதல் காரணமாக +2 மாணவர் பலியாகி உள்ளது பள்ளக்கால் புதுக்குடி பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் உடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும் இசம்பவம் தொடர்பாக 3 மாணவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள சில பள்ளிகளில் கடந்த சில காலமாகவே ஆசிரியர்களை மாணவர்கள் தரக்குறைவாகப் பேசுவது, மாணவர்களுக்கு இடையே கொடூரமாகத் தாக்கிக் கொள்வது போன்ற செயல்கள் அதிகரித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.