ஆளுநர் மீது கருப்புக்கொடி வீசியது உண்மையா? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

377

சென்னை (20 ஏப் 2022): ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கருப்புக் கொடிகள் வீசியதாக கூறப்படும் நிலையில் இதற்கு முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க ஆளுநர் ஆர்.என் ரவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்றைய தினம் மயிலாடுதுறை சென்றிருந்தார்.

ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ், விசிக, திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

அப்போது ஆளுநரின் கான்வாய் வாகனம் மீது கல்வீச்சு, தண்ணீர் பாட்டில் வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. பாஜக தலைவர் அண்ணாமலை, எடப்பாடி உள்ளிட்டவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் இன்றைய தினம் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்த சட்டசபை கூடியது. அப்போது ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியதை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்தது. அது போல் பாஜகவும் வெளிநடப்பு செய்தது.

ஆளுநர் விவகாரம் குறித்து விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின், “தமிழக காவல்துறையினர் அளித்த பாதுகாப்பின்படி ஆளுநர் எந்த தடங்கலும் இன்றி பத்திரமாக சென்று வந்தார் . ஆளுநர் பாதுகாப்பு விவகாரத்தில் திமுக அரசு எந்த சமரசமும் செய்துக் கொள்ளாது. ஆளுநர் மீது ஒரு தூசு கூட விழாமல் காவல் துறை தன் கடமையை செய்திருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என சொன்ன முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர் சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.” என்றார்.