திமுக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

312

சென்னை (29 ஜன 2022): சென்னை மாநகராட்சி பொறியாளரைத் தாக்கியது தொடர்பாக , சென்னை திருவொற்றியூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த கே.பி.சங்கர் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து, திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி வருவதால், திருவொற்றியூர் மேற்குப் பகுதி கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார்.

அதையடுத்து, திமுக எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் மீது காவல்நிலையத்தில் சென்னை மாநகராட்சி புகார் அளித்துள்ளது. அந்த மனுவில், சென்னை மாநகராட்சி பொறியாளரைத் தாக்கியது தொடர்பாக, திமுக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (29/01/2022) தனித்தனியாகவும் கூட்டாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சட்டப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உதவிப் பொறியாளர், சாலைப் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களிடம் முறைப்படி புகார் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.