தமிழகத்தில் கொரோனா பரவல் – தலைமை செயலாளர் பரபரப்பு அறிக்கை!

சென்னை (03 ஏப் 2021): கொரோனா நோய் தொற்று பரவலை கண்காணித்து தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார்.

“இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் கொரோனாநோய்த் தொற்று அதிகரித்துவரும் சூழல் காணப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இந்த தொற்று அதிவேகமாகவும், பன்மடங்கும் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், அதேவேளையில் பஞ்சாப், கர்நாடகா, சதிஷ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், டெல்லி மற்றும் தமிழ்நாட்டிலும் நாள் ஒன்றுக்கு நோய்த் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டும் 02.04.2021 அன்று மத்திய அரசின் அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபா அவர்கள் தலைமையில் மாநிலங்களில் கொரோனா நோய்த் தொற்று தொடர்பான விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் சார்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், முனைவர் அதுல்ய மிஸ்ரா அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, க. பணீந்திர ரெட்டி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிருவாக ஆணையாளர், டாக்டர் ராதாகிருஷ்ணன், அரசு முதன்மைச் செயலாளர் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, டாக்டர் உமாநாத், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் மேலாண்மை இயக்குநர் தாமரை கண்ணண், கூடுதல் காவல் துறை தலைவர், திருமதி ஷில்பா சதீஷ்குமார் அரசு இணைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, டாக்டர் செல்வவிநாயகம், இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் மத்திய அமைச்சரவை செயலாளர் பேசுகையில், மீண்டும் அதிகரிக்கும் கொரோனா நோய்த் தொற்று நம் நாட்டின் முக்கிய பிரச்சினை என்றும் சிறியநகரம் மற்றும் கிராமங்களில் இத்தொற்று உறுதியாவது கவலையளிப்பதாகவும் கூறினார்.

மேலும் கடந்த ஆண்டைப்போல் இல்லாமல் நம் அனைவருக்கும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது நன்றாக தெரியும் என்றும், தடுப்பூசி கிடைக்கப்பெறுவது ஒரு சாதகமான சூழல் என்றாலும், நிலையான வழிகாட்டு முறைகளை கடைபிடிக்காமல் மெத்தனப் போக்கு கொண்டிருப்பது தொற்று அதிகரிக்க வழிவகை செய்யும் எனவும் மேலும் ஊரடங்கு இல்லாத நிலையில் இத்தொற்றை தடுப்பது சவாலானது எனவும் கூறினார். தொற்று அதிகரிக்கும் விகிதம் கடந்த ஆண்டைவிட அதிகமாக இருப்பதாக எச்சரிக்கை விடுத்தார்.

இச்சூழலில் இத்தொற்றினை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் கீழ்க்கண்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செயல்படுத்த அறிவுரை வழங்கினார்.

1. பரிசோதனைகளை அதிகப்படுத்தி நாளொன்றுக்கு தொற்றின் நேர்மறை விகிதம் (Positivity Rate) 5 சதவிகிதத்துக்கும் கீழ் கொண்டுவர அறிவுறுத்தினார். தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை தொற்றின் நேர்மறை விகிதம் 5 சதவிகிதத்துக்கும் கீழாகவே உள்ளது என்ற போதிலும் RT-PCR சோதனைகளை அதிகப்படுத்த ஆணையிட்டதன் விளைவாக நாள் ஒன்றுக்கு 50,000 என்ற அளவிலிருந்து தற்பொழுது நாளொன்றுக்கு 85,000 RT-PCR பரிசோதனைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதலாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது (Increased and Aggressive Testing). மேலும் பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் தெரியப்படுத்தப்படுகிறது.

2. கொரோனா பரிசோதனை முறைகளில் குறைந்தபட்சம் 70 சதவீதம் RT-PCR முறையில் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தினார். தமிழ்நாட்டினை பொறுத்தவரை 100 சதவீதமும் RT-PCR பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது.

3. நோய்தொற்று ஏற்பட்டவரின் உடன் இருப்பவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் குறைந்தபட்சமாக 25 முதல் 30 நபர்களை விரைவாக கண்டறிந்து RT-PCR பரிசோதனை செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை நோய்த்தொற்று ஏற்பட்டவரின் உடனிருப்பவர்கள் மற்றும் தொடர்பில் உள்ளவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நோய்த் தொற்று இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு (Isolation) தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு (Treatment) நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

4. மேலும் நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட தெருக்கள் மற்றும் குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டு, மூன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அந்தப் பகுதி நோய்கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு (Micro Containment) நோய்தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தில் 02.04.2021 அன்று 846 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

5. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து தொற்றின் வீரியத்திற்கு ஏற்றவாறு கோவிட் கவனிப்பு மையம் (Covid Care Centre) அல்லது பிரத்தியேக கோவிட் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவைக்கு அதிகமாகவே படுக்கைவசதிகள், பிராணவாயு கருவிகள் (Ventilators, High Flow Nasal Cannula), மருந்துகள் (Medicines), பாதுகாப்பு கவசங்கள் (Personal Protective Equipment) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் காலதாமதமின்றி சிகிச்சை அளிக்க ஏதுவாக ‘108’ அவசர கால ஊர்தி செயல்பாட்டில் உள்ளது.

6. கொரோனா தொற்றினை தடுக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மக்களுக்கு மீண்டும் வலியுறுத்தவேண்டும். இதை சட்டப்படி கண்காணித்து செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டினை பொறுத்தவரை இந்தநிலையான வழிகாட்டு நெறிமுறைகளை ஊடகங்கள், துண்டு பிரச்சுரங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மூலமாக அனைத்து மக்களுக்கும் வலியுறுத்தப்படுகிறது. மேலும் தமிழ்நாடு பொதுசுகாதார சட்டம் 1939-ன்படி இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு சுகாதார, உள்ளாட்சி, காவல், வருவாய்த்துறை அலுவலர்கள் மூலமாக அபராதம் விதிக்கப்படுகிறது. 16.03.2021 லிருந்து 02.04.2021 வரை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.2,58,98,600/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கூடும் இடங்களாகிய சந்தை, வழிபாட்டுத்தளங்கள் மற்றும் கலாச்சாரம் சார்ந்த திருவிழக்களில் கோவிட் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.

7. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடையவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும். மக்களிடையே, இத்தடுப்பூசி மீதுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தவேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மினி கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நெறிமுறைகளின்படி 02.04.2021 அன்று வரை சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், தேர்தல் பணியாளர்கள், 45வயதிற்கு மேற்பட்ட நபர்கள் என 31,75,349 பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மக்களிடையே இது தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் நம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது. மேலும் 03.04.2021 அன்று வரை 54,78,720 தடுப்பூசி னடிளநள தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

8. கொரோனா தொற்றினால் ஏற்படும் மரணங்களை குறைக்க அரசு வெளியிட்டுள்ள நிலையான சிகிச்சை நெறிமுறைகளை அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மருத்துவ வல்லுநர் குழு அமைக்கப் பெற்று மத்திய அரசின் AIIMS போன்ற மருத்துவ மனைகளில் உள்ள வல்லுநர்களின் ஆலோசனைக்கு ஏற்ப நிலையான சிகிச்சை நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு பின்பற்றப்படுகிறது.

9. மேலும் பொது சுகாதார இயக்குநரகம் மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்குகிறது. பொதுமக்கள் மேற்கொண்டு தகவல்களை பெறவோ தங்கள் குறைகளை தெரிவிக்கவோ 24 மணி நேரமும் இயங்கும் ‘104’ தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

10. மேலும் நோய்த்தொற்று குறித்து தினசரி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக அரசு, மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கோவிட் பெருந்தொற்றினை பரவாமல் தடுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தும், முறையாக கைகளை கழுவியும் மற்றும் அரசின் இன்ன பிற அறிவுறுத்தல்களை கடைபிடித்தும் கொரோனா பெரும் தொற்றினை தடுத்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அதில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

ஹாட் நியூஸ்:

முஹம்மது நபியை இழிவு படுத்தியவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

போபால் (30 ஜன 2023): முஹம்மது நபியை இழிவு படுத்தும் வகையில் கோஷம் எழுப்பியவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 25 ஆம் தேதி அன்று ஷாருக்கான்...

மோடிக்கு எதிரான பிபிசி ஆவணப்பட தடைக்கு எதிராக வலுவடையும் மாணவர்கள் போராட்டம்!

புதுடெல்லி (27 ஜன 2023): பிபிசி ஆவணப்படம் திரையிட தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளனர். பல்கலைக்கழகங்களில் பிபிசி ஆவணப்படம் திரையிட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஜேஎன்யுவில்...

மோடிக்கு எதிரான பிபிசியின் இரண்டாவது ஆவணப்படம் பேசுவது என்ன?

புதுடெல்லி (25 ஜன 2023): பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப்படத்தின் இரண்டாம் பாகத்தை பிபிசி ஒளிபரப்பியது. 2019 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு குடியுரிமை திருத்தச்...