சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம்!

Share this News:

திருச்சி (19 அக் 2020): தமிழகத்தில் சட்டமன்ற பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தார்.

திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் திங்கட்கிழமை மாலை அரிஸ்டோ மஹாலில் அக்கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ.எம். முஹம்மது அபுபக்கர், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி, மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜகான் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பளராக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் நிர்வாகிகள் நியமனம் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

பின்னர் கூட்டத்திற்கு பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:கட்சியில் காலியாக இருந்த பல்வேறு நிா்வாகப் பதவிகளுக்கு நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக கட்சியின் துணைத் தலைவராக ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி, துணைத் தலைவராக திருச்சி டி.எம். பாரூக், மாநிலத் துணைச் செயலா்களாக வந்தவாசி காதா் ஷெரீப், ஆடுதுறை ஜமால்முகமது இப்ராஹிம் உள்ளிட்ட நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும் நிா்வாகக் காரணங்களுக்காக கட்சி சாா்பில் புதிய மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

பேரவைத் தோ்தலில் மதசாா்பற்ற அணியை உருவாக்கியுள்ள திமுகவுடன் கூட்டணி வைத்து, வெற்றிக்காகவும், தி.மு.க. தலைைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராகவும் பாடுபடுவோம். கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.போட்டியிடும் தொகுதிகள் குறித்து மாவட்ட நிா்வாகிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.

நவம்பா் 30-க்குள் அனைத்துப் பகுதிகளிலும் பொதுக்குழுவை கூட்டி, அவா்களிடமிருந்து வரும் ஆலோசனையின் பேரில் டிசம்பா் மாத இறுதிக்குள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும். திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்பது கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, மக்களின் கருத்தாகவும் உள்ளது. எனவே ஆட்சி மாற்றம் ஏற்படும் இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது விபரம் வருமாறு ; மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் 6 வருடங்களாக பல்வேறு சட்டங்கள் பாராளுமன்றத்தில் விவாதமின்றி, முறையாக வாக்கெடுப்பு நடத்தாமல் மக்கள் மீது திணித்து ஜனநாயகத்தின் குரல்வலை நெறிக்கப்பட்டு வருகின்றது. வேளாண்மை திருத்தச் சட்டங்களின் மூலம் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை, முத்தலாக் தடை சட்டம், கஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கம், பாபர் மஸ்ஜித் தீர்ப்பு, குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற மக்கள் விரோத சட்டங்களும், உ.பி. மாநிலம் ஹத்ராஸில் தலித் பெண் கூட்டு பலாத்கார படுகொலை என மத்தியிலும், மாநிலங்களில் ஆளும் பா.ஜ.க. ஆட்சிகளில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, தாழ்த்தப்பட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டு இந்திய திருநாட்டின் மாண்புகள் ஒன்றன் பின் ஒன்றாக நீக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு மத்திய பா.ஜ.க. அரசிற்கு முற்றிலும் அடிபணிந்து செயல்படுவதின் காரணமாக நாம் தமிழகத்தின் உரிமைகளை இழந்து வருகின்றோம். நம் உரிமைகளை மீட்டிட ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வாக இருக்க முடியும் என இக்கூட்டம் நம்பிக்கை தெரிவிக்கின்றது.

2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்வதோடு, தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நல்லாட்சி மலர்ந்திட முழு மனதோடு பணிகளாற்றுவதென்றும் இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மாநாட்டை பிப்ரவரி மாதத்திற்கு முன்பு கொரோனா தொற்று அரசு வழிமுறைகளை பின்பற்றி எழுச்சியுடன் வரலாறு படைக்கும் மாநாடாக நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

இம்மாநாட்டிற்கு சிறப்புரையாற்ற திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை அழைப்பதென்றும், கேரள தலைவர் பானக்காடு செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள், தேசிய பொதுச்செயலாளர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி எம்.பி., ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக அழைப்பதென்றும் இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.இம்மாநில மாநாடு வரவேற்பு குழு தலைவராக இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் ஹாஜி கே. நவாஸ்கனியை நியமனம் செய்யப்பட்டது.

கொரோனா தொற்று காலங்களில் மக்கள் சந்தித்த பல்வேறு சிரமங்களை போக்கிடும் வகையில் மனித நேயத்தோடு பணிகளாற்றிய அரசு அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள், அனைத்து கட்சியினர், பொதுநல அமைப்புகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட, பிரைமரி நிர்வாகிகள் குறிப்பாக வெளிநாடுகளில் வேலையின்றி அவதிக்குள்ளானவர்களை சிறப்பு தனி

விமானங்கள் மூலம் தாயகத்திற்கு அழைத்து வரக்கூடிய பணிகளை முழு பொறுப்பேற்று காரியமாற்றிய காயிதே மில்லத் பேரவை, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளின் நிர்வாகிகளுக்கும், கே.எம்.சி.சி. நிர்வாகிகளுக்கும் இப்பணிகளை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்த மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி, திருச்சி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கும் இக்கூட்டம் இதயம் நிறைந்த பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் இறையருளால் பூரண நலம் பெற்று இல்லம் திரும்பியுள்ளார்கள், இறைவனுக்கே எல்லா புகழும். தலைவர் அவர்கள் திருச்சி சுந்தரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலங்களில் தொடர்ந்து துஆ மஜ்லிஸ், ஏழைகளுக்கு சதக்கா வழங்கி மனம் உருகி வல்லோன் இறைவனிடம் பிரார்த்தித்து, நலம் விசாரித்து உள்ளன்போடு வாழ்த்திய அனைத்து கட்சி தலைவர்கள், சர்வ சமய சகோதர, சகோதரிகள், தாய்ச்சபை முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் தன்னிகரில்லாத குடும்ப உறவுகள், சமுதாய சொந்தங்கள் அனைவர்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

குறிப்பாக தலைவர் அவர்கள் பூரண நலம் பெற தனி கவனம் செலுத்தி உரிய சிகிச்சை அளித்த சுந்தரம் மருத்துவமனை டாக்டர் விவேக் சுந்தர் மற்றும் மருத்துவ குழுவினர்களுக்கு இக்கூட்டம் இதயம் நிறைந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறது. நம் அன்பு தலைவர் பேராசிரியர் பெருந்தகை அவர்கள் சரிர சுகத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து சமூகத்திற்கு வழிகாட்டிட வல்லோன் இறைவனிடம் இக்கூட்டம் இறைஞ்சுகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகக்குழு தீர்மானத்தின் படி, உ.பி. மாநிலம் ஹத்ராஸில் தலித் பெண் கூட்டு பலாத்காரம் – படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதி கேட்க சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் உ.பி. காவல்துறையினரால் தாக்கப்பட்டதை கண்டித்தும் தமிழகத்தில் 10.10.2020 அன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை எழுச்சியுடன் நடத்திய அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

அகிலத்தோருக்கு அருட்கொடையாக வந்துதித்த இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாள் விழாக்களை வழமைப் போல இவ்வருடமும் பல்சமய அறிஞர்கள், உலமா பெருமக்களை அழைத்து சமய நல்லிணக்க விழாவாக தமிழகத்தின் அனைத்து மஹல்லாக்களிலும் சிறப்போடு நடத்திட முஸ்லிம் லீக் நிர்வாகிகள், அனைத்து ஜமாஅத்தினரையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டம் 12.04.2018 அன்று கேரள மாநிலம் திருவனந்தபுரம், அப்பல்லோ டிமோரோ ஹோட்டலில் நடைபெற்று புதிய தேசிய நிர்வாகிகள் டிசம்பர் 31, 2021 வரை பதவி வகிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத்தின் அனைத்து நிலையிலான தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை டிசம்பர் 31, 2021 வரை நீடிப்பு செய்வதென இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாறு, பாராளுமன்ற – சட்டமன்ற நடவடிக்கைகள், அன்றாட அரசியல் நிலைமை, தாய்ச்சபையின் செயல்பாடுகள், தலைமை நிலையத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்புகளை முறைப்படுத்தி நாட்டு மக்களுக்கு பரப்புரை செய்திட தகவல் தொழில் நுட்ப அணி உருவாக்கப்பட்டு கீழ்க்கண்ட பொறுப்பாளர்களை இக்கூட்டம் நியமிக்கின்றது. இப்பொறுப்பாளர்கள் தொழில் நுட்ப அணியின் செயல் திட்டங்களை அறிக்கையாக 10.11.2020க்குள் மாநில தலைமைக்கு சமர்பிக்க வேண்டுமெனவும், அதன்பின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த அணியின் பொறுப்பாளர்களை நியமித்து, செயல்பாடுகளை விரிவுபடுத்துவதென்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

மாநில ஒருங்கிணைப்பாளர்: சென்னை எம்.எஸ். சல்மான் முஹம்மது ,மாநில இணை ஒருங்கிணைப்பாளர்: மேலப்பாளையம் பி.எம். அப்துல் ஜப்பார், மாநில துணை ஒருங்கிணைப்பாளர்: கோம்பை ஜெ. நிஜாமுதீன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Share this News:

Leave a Reply