நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை – ஸ்டாலின் திட்டவட்டம்!

Share this News:

சென்னை (16 ஜூன் 2020): கொரோனா பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணாவிட்டால் திமுக நீதிமன்றத்தை நாடும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் அடங்காமல் மேலும் பரவி வருகிறது. தமிழகத்தில் மே 31ம் தேதிவரை அதாவது 71 நாட்களில் 176 பேர் இறந்திருக்கிறார்கள். அடுத்த 15 நாட்களுக்குள் மட்டும் 259 பேர் இறந்திருக்கிறார்கள். இதனைப் பார்த்து மாநில அரசாங்கத்துக்கு பதற்றமோ படபடப்போ வந்ததாகத் தெரியவில்லை.

அரசு தன் செயல்படாத அலட்சியத்தால் இன்றைக்கு நம்மை நோய்ப் பேரிடருக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. மார்ச் -21: மத்திய அரசு சுயஊரடங்கு அறிவித்த பிறகுதான் அதிமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. அதுவரை மத்திய அரசின் பொம்மையாக இருந்து- குழப்பத்தில் என்ன செய்வது என்றே தெரியாமல் அ.தி.மு.க. அரசு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது.

மார்ச்-28: ஊரடங்கினால் மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை கருத்தில் கொண்டு அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் 5000 ரூபாய் பண உதவி செய்ய வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தியது. அதை அரசு செய்யவில்லை. இந்தப் பண உதவியை அ.தி.மு.க. அரசு மக்களுக்கு அளிக்க முன்வராததற்கு என்ன காரணம்? மார்ச்-28: கொரோனா பேரிடரில் மக்களைக் காப்பாற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். ஆனால் அதற்கு இந்த அரசு செவிமடுக்கவில்லை. கொள்ளை நோயின் காலத்தில் பிரதமரிடமும், அகில இந்திய எதிர்க்கட்சித் தலைவரிடமும் பேச முடிந்தது. ஆனால் நமது மாநில முதல்வரிடம் பேச முடியவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.

ஏப்ரல்-24: சென்னைக்கும்- நான்கு நகரங்களுக்கும் “ஊரடங்கிற்குள் 4 நாள் ஊரடங்கை” திடீரென அறிவித்தார் முதல்வர். பதற்றத்தில் ஏப்ரல் 25-ம் தேதி கோயம்பேடு மார்க்கெட் உட்பட பல்வேறு கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்தப் பொறுப்பில்லாத ஊரடங்கு முடிவானது தினமும் 50-க்கும் குறைவாக இருந்த கொரோனா நோய்ப் பாதிப்பை-ஒருவாரத்திலேயே தினமும் 250-ஆக உயர்த்தி மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்றை பன்மடங்கு பெருக்கியது.

ஜூன்-7: கொள்ளை நோய் துவக்கத்திலிருந்து பரிசோதனை மற்றும் இறப்பு குறித்து அரசு தகவல்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தியதன் பிறகே- ஜூன் 7-ம் தேதிக்குப் பிறகு, மாவட்ட வாரியாக பரிசோதனை குறித்து ஒரு நாள் மட்டும் தகவல் வெளியிட்டார்கள். பின்பு அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது.

ஜூன்-8: சமூகப் பரவல் இல்லை என்று கூறி- மக்களின் உயிரைப் பணயம் வைத்து தவறான தகவல் மூலம் இந்த அரசு அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறது. ஜூன்-13: பொது சுகாதாரத்துறை, சென்னை மாநகராட்சி மற்றும் மருத்துவமனைகளில் 460 பேர் சென்னையில் இறந்துள்ளதாக ஜூன் 9ம் தேதி வெளியிட்டுள்ளது. ஆனால் மாநில சுகாதார துறை 224 பேர் மட்டுமே இறந்ததாக தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸால் இறந்த 236 பேரின் மரணம்- அதாவது இரு மடங்கிற்கும் அதிகமானவர்களின் மரண எண்ணிக்கை மறைக்கப்பட்டுள்ளதுதான் கவலையளிக்கிறது.

கணக்கில் வராத 236 பேரின் மரணங்கள் என்பது ஏதோ புள்ளிவிவரம் மட்டுமல்ல. யாரோ ஒருவருக்கு மகனாகவோ, மகளாகவோ, அன்பிற்கும் பிரியத்திற்கும் உரியவர்களாகவோ, குடும்ப உறுப்பினர்களாகவோ இருந்து உயிரை இழந்தவர்கள். இறப்பில் கூட இந்த 236 பேரின் கண்ணியம் அவமதிக்கப்பட்டுள்ளது.

இறப்பு எண்ணிக்கையை மறைப்பதில் அரசுக்கு உள்ள உள்நோக்கமும் தெரிகிறது. அரசின் உயர்மட்டத்தில் உள்ளவர்களின் பங்களிப்பின்றி இவ்வளவு பெரிய அளவில் இறப்பு எண்ணிக்கையை மறைக்க முடியாது. ஏப்ரல் 1-ம் தேதி முதன்முதலாக 16 வகையிலான தகவல்களுடன் தினசரி செய்திக் குறிப்பு வெளியிட்டார்கள். இன்றைக்கு 9 வகை தகவலுடன்-முக்கிய தகவல்களை மறைத்து செய்திக் குறிப்பு வெளியிடுகிறார்கள்.

திமுக கொரோனாப் பணிகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது. அதேநேரத்தில் அதிமுக அரசு கொரோனா குளறுபடிகளைச் செய்து-அனைத்து வகையிலும் தோல்வியடைந்து நிற்கிறது. தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சி என்ற முறையில்- சில முக்கிய கேள்விகளை முதல்வரிடம் கேட்க விரும்புகிறேன். இந்தக் கேள்விகளுக்கான பதில் மக்களுக்கும் தெரிந்தாக வேண்டும்.

1. சமூகப் பரவல் இல்லை என்று சொல்வது உண்மையென்றால், ஏன் கொரோனா நோய்த்தொற்று தினமும் ஏணிப் படிகள் போல் அதிகரித்து வருகிறது?
2. மேல் நோக்கி உயர்ந்து கொண்டே போகும் கொரோனா நோய்த்தொற்று வரைபடத்தை தட்டையாக்குவதற்கு குறிப்பாக சென்னையில், அப்படிச் செய்வதற்கான செயல்திட்டத்தை எப்போது வெளியிடுவீர்கள்?
3. ஊரடங்கு காலத்தில் கமிட்டி மேல் கமிட்டி நியமித்துள்ளீர்கள். ஆனால் இதுவரையிலும் எந்தக் கமிட்டியின் அறிக்கையும் பொதுவெளியில் இல்லை.
4.இந்த நெருக்கடியான நேரத்தில் ஆக்கபூர்வமாக ஆதரவளிக்க உத்தரவாதம் அளித்த எதிர்க்கட்சிகள், நிபுணர்கள், சம்பந்தப்பட்டவர்கள் ஆகியோருடன் கலந்துபேச ஏன் அரசு தொடக்கத்தில் இருந்து மறுத்து வருகிறது?

5. பொருளாதாரத்தை மீட்பது, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவது உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளில் எப்போது அரசு ஆர்வம் காட்டப் போகிறது?. இதற்கு நேர்மையான பதிலை தமிழக அரசு தரவேண்டும்.

மருத்துவக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி விரிவாக்கம் செய்ய வேண்டும். பரிசோதனைகளை பரவலாக்கி, அதிகப்படுத்த வேண்டும். வரும் அக்டோபர் – நவம்பரில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும் என்று ஐ.சி.எம்.ஆர் கொடுத்துள்ள எச்சரிக்கையை, தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும்.

கொரோனாவில் உயிர் இழந்த ஏழை எளியோர் குடும்பங்களுக்குத் தேவையான நிதி உதவி அளிக்க வேண்டும். இந்தப் பேரிடர் காலத்தில், அதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, அமைச்சர்களுக்கு இடையே நடக்கும், ‘குழு மனப்பான்மை‘ அடிப்படையிலான, தன் முனைப்புச் சண்டை முடிவுக்கு வர வேண்டும்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு, சிறப்புத் திட்டம் வகுத்துச் செயல்படுத்த வேண்டும். அதோடு, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையை, எந்தவித ஒளிவு மறைவும் இன்றி, கூட்டல் கழித்தல் இல்லாமல், அப்படியே அடுத்த இரண்டு நாட்களுக்குள், மக்கள் மன்றத்தின் முன் தமிழக அரசு வைக்க வேண்டும். இந்தப் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படவில்லை என்றால், திமுக நீதிமன்றத்தை நாடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


Share this News: