திமுக நிர்வாகி திடீர் நீக்கம் -பரபரப்பு பின்னணி!

Durai Murugan
Share this News:

சென்னை (14 பிப் 2021): திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணை செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை கடுமையாக விமர்சித்துப் பேசிய ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, அவர் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை மாவட்டத்தின் திமுக முகமாக இருந்து வருகிறார். திமுகவில் திருவண்ணாமலை மாவட்டம் தெற்கு வடக்கு என்று பிரிக்கப்பட்டபோது எ.வ.வேலும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ-வாகவும் இருந்து வருகிறார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணை செயலாளராக சாவல்பூண்டி சுந்தரேசன் இருந்து வருகிறார். திருவண்ணாமலை மாவட்ட திமுகவில் சிறந்த பேச்சாளராக அறியப்பட்ட இவர் அடிக்கடி ஏதேனும் சர்ச்சையில் சிக்குவதுண்டு.

சில மாதங்களுக்கு முன்பு சாவல்பூண்டி சுந்தரேசனுக்கு ஏற்கெனவே மனைவி, மகன், பேரப்பிள்ளைகள் இருக்கின்ற நிலையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த அபித என்ற இளம்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அப்போது, அவர் கலைஞரை உதாரணம் காட்டியது கட்சியில் கடும் விமர்சனத்தை ஈர்த்தது.

திருவண்ணாமலை மாவட்ட திமுகவில் எ.வ.வேலுவும் அவரது மகன் கம்பனும் உள்ளார்கள். மாவட்டத்தில் எ.வ.வேலுவுக்கு அடுத்து அவருடைய மகனுக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக கட்சியில் சில மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தி இருந்துவருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், திமுக தெற்கு மாவட்ட துணை செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன், எ.வ.வேலுவையும் அவரது மகன் கம்பனையும் திமுகவில் நிலவும் வாரிசு அரசியலையும் கடுமையாக விமர்சித்து மற்றொரு திமுக நிர்வாகியிடம் போனில் பேசிய ஆடியோ சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து சாவல்பூண்டி சுந்தரேசனை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply