ஒரு கார்பரேட் கம்பெணி தமிழகத்தை ஆளுகிறது – எடப்பாடி பழனிச்சாமி!

Share this News:

கோவை (02 டிச 2022): ஒரு கார்பரேட் கம்பெணி தமிழகத்தை ஆளுகிறது என்று திமுகவை சாடி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

ஆளும் திமுக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வைக் கண்டித்து, கோவையில் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று (டிச.2) நடைபெற்றது. கோவை சிவானந்தா காலனியில் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

பின்னர், தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், “திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 18 மாதம் காலம் ஆகிறது. இந்த 18 மாத கால ஆட்சியில், கோவை மாவட்டத்தில் இருக்கிற மக்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது. எந்த புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை. திமுக ஆட்சியால், கோவை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது. எந்தவொரு பெரிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை, அதனால் மக்கள் எந்தப் பயனும் பெறவில்லை.

ஒரு ஆட்சி எப்படி செயல்படக்கூடாது? ஒரு முதல்வர் எப்படி நடந்துகொள்ளக்கூடாது? என்பதற்கு இந்த 18 மாத கால ஆட்சியே சான்று. இந்த ஆட்சியில் மக்கள் என்ன பலனைக் கண்டார்கள்? எங்கள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தை பொம்மை முதலமைச்சர் பேசி வருகிறார். அதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு கார்பரேட் கம்பெனி தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. அதை மறந்து முதல்வர் பேசி வருகிறார். பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் பாழாகிவிட்டதாகவும், நாசமாக்கி விட்டதாகவும் முதல்வர் குற்றம்சாட்டி வருகிறார்.

10 ஆண்டுகால அதிமுக ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி. ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், எனது தலைமையில், 4 வருடம் 2 மாத காலம் சிறப்பான ஆட்சியை தந்தோம். குடும்ப ஆட்சி நடத்துகிற முதல்வருக்கு அதிமுக குறித்து பேசுவதற்கு தகுதி கிடையாது, அருகதை கிடையாது. அதிமுகவை விமர்சனம் செய்வதற்கும் ஒரு யோக்கியதை வேண்டும்” என்று அவர் பேசினார்.


Share this News:

Leave a Reply