குடும்ப பெண்களின் ஆபாச படங்களை வைத்துக் கொண்டு மிரட்டல் – பொறியியலாளர் கைது!

741

சென்னை (16 ஏப் 2020): குடும்ப பெண்களின் ஆபாச படங்களை வைத்துக் கொண்டு மிரட்டல் விடுத்த சிவக்குமார் என்ற பொறியியலாளரை போலீசர் கைது செய்துள்ளனர்.

சென்னை புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு இ-மெயில் மூலம் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், தனது மனைவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பழகிவந்த நபர், தனது மனைவியின் படங்களை ஆபாசமாக சித்தரித்து வீடியாவாக பதிவு செய்து வைத்துக் கொண்டு, பணம் கேட்டு மிரட்டுகிறார்.

பணம் தராவிட்டால் சமூக வலைத்தளங்களில் அந்த போட்டோக்களையும், வீடியோவையும் வெளியிட்டு விடுவதாக மிரட்டுகிறார். எனவே இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு, தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார். விசாரணையில்,

மிரட்டல் விடுத்த நபர் ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிழக்கு தெருவைச் சேர்ந்த சிவக்குமார் என்பது தெரிய வந்தது. கம்பியூட்டர் என்ஜினீயரான அவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது;

அதில்,. சிவக்குமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயரில் ஒரு கணக்கும், சுகன்யா, பிரியா என்ற பெயர்களில் போலி கணக்கும் வைத்து இந்த மிரட்டல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். தனது உண்மையான கணக்கில் இருந்து சில பெண்களை தேர்வு செய்து, அவர்களுக்கு நட்பாகி வழக்கமான தகவல்களையும், கொரோனா விழிப்புணர்வு தகவல்களையும் பரிமாற்றம் செய்துள்ளார். இவரின் செயல்பாட்டினை கண்ட பெண்கள் அவரிடம் நட்பாக பழகி வந்ததோடு, அவர்களின் தகவல்களையும் பகிர்ந்துள்ளனர்.

அப்போது அவர்களின் வலைத்தள பக்கத்தில் இருந்து போட்டோக்களையும், வீடியோக்களையும் எடுத்துக் கொண்டு பதிவிறக்கம் செய்து ஆபாசமாக சித்தரித்து அதனை சமூக வலைத்தளங்களில் போட்டுவிடுவதாக மிரட்டி வந்துள்ளார். இதே போன்று நட்பாக பேசிவந்த, சென்னை புதுப்பாக்கம் பகுதியைச் சேந்தவரின் மனைவியை போலி இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் ரூ.50,000 கேட்டு மிரட்டி உள்ளார். வருகிற 16-ந் தேதிக்குள் பணம் கொடுக்காவிட்டால் ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட போட்டோக்களை அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அப்லோடு செய்துவிடுவதாகவும், அவர் வசிக்கும் தெருவில் போஸ்டர் அடித்து ஒட்டி விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போய் அந்த பெண் தன்னுடைய கணவரிடம் சொல்லி அழுதுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார், சிவக்குமாரை கைது செய்து அவரின் செல்போனை வாங்கி பரிசோதித்தனர். அந்த செல்போனில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து வைத்துள்ளார், பெண்களின் பெயரில் வைத்துள்ள கணக்குகள் மூலம் பல ஆண்களையும் மிரட்டி போட்டோக்களை வைத்திருப்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.