முதல் நாள் மகன் மரணம், அடுத்த நாள் தந்தை மரணம் – போலீஸ் மீது மக்கள் குற்றச்சாட்டு!

536

தூத்துக்குடி (23 ஜூன் 2020): சாத்தான்குளத்தில் மகன் போலீஸ் கஸ்டடியில் மரணம் அடைந்துவிட அடுத்த நாள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தையும் இறந்துள்ளதால் சாத்தான்குளம் பகுதி பெரும் பரபரப்பாய் காணப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். இவர் கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனும், ரகுகணேஷ் ஆகிய இருவரும் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் கடுமையாகத் தாக்கி ரத்தப் போக்கு ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதைப் படிச்சீங்களா?:  சிஏஏ வழக்கில் இளைஞர்கள் மீதான எஃப்.ஐ ஆரை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு!

மேலும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக ஜெயராஜ் மருத்துவச் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்த மகன் பென்னிக்ஸ் நேற்றிரவு (22/06/2020) மர்மமான முறையில் உயிரிழக்க, அவரது தந்தையான ஜெயராஜ் அதிகாலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். தந்தை, மகன் இருவரும் அடுத்ததடுத்து உயிரிழந்ததற்குக் காரணம் போலீசாரின் கடுமையான தாக்குதலே என்கின்றனர் உள்ளூர் பொதுமக்கள்.

இதனால் போலீசை எதிர்த்து பெரும் போராட்டத்திற்கு தயாராகியுள்ளனர். சாத்தான்குளம் மக்கள்.