தனியார் ஆய்வகங்களில் இலவச கொரோனா பரிசோதனை – பீலா ராஜேஷ் அறிவிப்பு!

508

சென்னை (13 ஏப் 2020): தனியார் ஆய்வகங்களில் செய்யப்படும் கொரோனா பரிசோதனைக்கான கட்டணங்களை அரசே ஏற்கும் என்று தமிழக சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது கொரோனா பரிசோதனைக்கான ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மொத்தம் 14 அரசு மருத்துவமனைகளுக்கும், 9 தனியாா் மருத்துவமனைகளுக்கும் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் அதனை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தனியாா் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைக்கான செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாட்டினை தமிழக முதல்வா் எடுத்துள்ளாா். அதன் அடிப்படையில், இனி வரும் நாள்களில் தனியாா் ஆய்வகத்திலும் கட்டணமின்றி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம்” என்றாா் அவா்.

கொரோனா பரிசோதனைக்கு தனியாா் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள் ரூ.4,500 வரை கட்டணமாக வசூலித்து வருகின்றன என்று உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இது தொடா்பான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து இடங்களிலும் இலவசமாகப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.