ஆபாச யூடூயூப் பிரபலம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

Share this News:

சென்னை (06 ஜூலை 2021): ஆன்லைன் விளையாட்டு மூலம் ஆபாசப் பேச்சு, பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் `பப்ஜி’ மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு டிப்ஸ் தருவதாகக் கூறி அதற்கென யூட்யூப் சமூக வலைதளத்தில் தனக்கென ஒரு பிரத்யேக பக்கத்தை நிறுவி லட்சக்கணக்கான பின்தொடருவோரை கொண்டிருப்பவர் மதன்.

இவர் துணுக்குகள் தரும் ஆன்லைன் விளையாட்டான பப்ஜி, சிறார்கள் தரப்பில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இவரது அடைமொழி ‘பப்ஜி’ ஆனது.

ஆன்லைன் விளையாட்டுலகின் சமூக வலைதள பயனர்கள் இடையே பப்ஜி மதன் என அழைக்கப்படும் இவர், மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி தமது பக்கத்தில் பங்கேற்கும் சிறார்கள், பெண்களிடம் ஆபாசமாக பேசுவதாக சர்ச்சை எழுந்தது.

இதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக 150க்கும் அதிகமான புகார்கள் சென்னை காவல்துறையிடம் பதிவு செய்யப்பட்டன.

புகாரின் எதிரொலியாக, பல வார தேடுதலுக்குப் பிறகு பப்ஜி மதனை கைது செய்த காவல்துறையினர், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.

இதற்கிடையே, ஆதரவற்றோருக்கு உதவுவதாகக் கூறி ஆன்லைனில் பலரிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக மதன் மீது மேலும் சில வழக்குகள் பதிவாகின.

இந்த நிலையில், மதன் தாக்கல் செய்த ஜாமீன் மனு இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் மதன்மீது சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் குண்டர் சட்ட நடவடிக்கை எடுத்திருக்கிறார்.


Share this News:

Leave a Reply