பார்வையற்ற பெண்ணிற்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் சூப்பர் தீர்ப்பு!

Share this News:

சென்னை (11 ஜூலை 2021): பார்வையற்ற பெண் என்பதற்காக அவரது சாட்சியத்தை புறம்தள்ள முடியாது என்பதாக கூறிய சென்னை உயர் நீதிமன்றம் குற்றவாளியின் சிறைத் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், எம்.சி.ஏ. படித்து வந்துள்ளார். பார்வையற்றவர்களுக்கு சென்னை வில்லிவாக்கம் பள்ளி ஒன்றில் இலவசமாக சங்கீத பயிற்சி வழங்குவதை கேள்விப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோவில் சென்றுள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் அன்புச்செல்வன் பள்ளிக்குச் செல்லாமல், ரயில்வே தண்டவாளம் அருகே அந்தப் பெண்னை அழைத்துச்சென்று, கொலை செய்து விடுவதாக மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர் அந்தப் பெண் கதறல் கேட்டு அருகில் உள்ளவர்களால் மீட்கப்பட்ட நிலையில், அன்புச்செல்வன் தப்பியோடிவிட்டார்..

ஆனால் வில்லிவாக்கம் போலீசார் விசாரணை நடத்தில் அன்புச்செல்வன் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்புச்செல்வம் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு, அன்புச்செல்வன் தரப்பில் பாதிக்கப்பட்ட பெண் பார்வை மாற்றுத் திறனாளி என்பதால் அவரது சாட்சியை கண்ணுற்ற சாட்சியாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், செவிவழி சாட்சியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

சம்பவத்தன்று ஆட்டோவை ஓட்டியது அன்புச்செல்வன் இல்லை என்றும், பாலியல் தொந்தரவு செய்ததை இரு வாலிபர்கள் மற்றும் இரு பெண்கள் நேரில் பார்க்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண் சொன்னதாகவே அவர்கள் சாட்சியம் அளித்துள்ளதால், அவர்களது சாட்சிகளையும் செவி வழி சாட்சிகாக கருதி, விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் அவர் பிறப்பித்த தீர்ப்பில்,”பார்வை மாற்றுத் திறனாளிகளின் நேரடி சாட்சியம், செவி வழி சாட்சியம் என்று ஒதுக்கி வைக்காமல் வழக்கின் தன்மைக்கு ஏற்ப, பிற சாட்சிகளுடன் ஒப்பிட்டு பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு பார்வை இல்லாவிட்டாலும், அவரது அழுகை சத்தம் கேட்டு, அங்கு வந்த நால்வரிடமும் கொடுமையை எடுத்து கூறியபோது, அன்புச்செல்வன் அங்கு இருந்தது நிரூபணம் ஆகியுள்ளது. ஆட்டோவை அன்புச்செல்வன் தான் ஓட்டினார் என வில்லிவாக்கம் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் தலைவரும் சாட்சியம் அளித்துள்ளதால், ஆட்டோ ஓட்டவில்லை என அன்புச்செல்வன் கூறுவதை ஏற்க முடியாது. பார்வையற்றவர் என்றாலும், உலகில் நடப்பவைகளை ஒலியினால் பார்த்து, அருகில் இருப்பவர்களை அவர்களது குரலின் சத்தத்தினால் அடையாளம் கண்டு, குரல் வழியாக அடையாளம் கண்டதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண் அளித்த சாட்சியத்தை புறம் தள்ளமுடியாது.

சராசரியான மனிதனின் சாட்சியத்தை விட எந்த வகையிலும் மாற்றுத் திறனாளிகளின் சாட்சியம் தரம் தாழ்ந்ததாக கருத முடியாது. அப்படி கருதினால் அரசியலமைப்புச் சட்டத்தில் அனைவரும் சமம் என்ற அடிப்படை கொள்கைக்கே முரணாகி விடும். பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணின் கண்ணுக்குள் வேண்டுமானால் இருள் இருக்கலாம், ஆனால், அவரது சாட்சியத்தில் வெளிச்சம் உள்ளது. ஆகவே அன்புச்செல்வனுக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் சிறை தண்டனையில், ஒரு நாள் கூட குறைப்பதற்கு விரும்பவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சத்தை வழங்க தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கை திறமையாகவும், விரைவாகவும் புலன் விசாரணை செய்த வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவலருக்கு எனது பாராட்டுகள்” என்றார்.


Share this News:

Leave a Reply