எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Share this News:

மதுரை (23 ஜன 2020): உயர் நீதிமன்றத்தை அவமரியாதையாக பேசிய எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 செப்டம்பர் 15ம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் அருகில் உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மேடை அமைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த வாக்குவாதத்தின்போது காவலர்கள் உயர்நீதிமன்ற ஆணையைச் சுட்டிக்காட்டி, அனுமதி மறுத்தனர். அப்போது காவல்துறையினரை மிகக் கடுமையாக கொச்சையாகத் திட்டிய எச்.ராஜா, உயர்நீதிமன்றத்தை அவமரியாதையாக ஆபாச வார்த்தைகளால் பேசினார். இந்த விவகாரம் தொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் நீதிமன்றத்தை விமர்சித்தது தொடர்பாக துரைசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கானது இன்று  நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எச்.ராஜா மீது திருமயம் காவல் ஆய்வாளர் 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

எச். ராஜாவின் இந்திய நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும் கீழ்த்தரமாகக் குறிப்பிட்டுப் பேசிய அருவருக்கத் தக்க  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply