தொடரும் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் – இந்தியர்களை வெளியேற்ற நடவடிக்கை!

Share this News:

புதுடெல்லி (28 ஜன 2020): கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாகிக் கொண்டுள்ள நிலையில் சீன நகரமான வூஹானில் இருந்து 250 க்கும் மேற்பட்ட இந்தியர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகான் நகரில் வசித்து வரும் மக்களை கடந்த மாத இறுதியில் கொரோனா எனப்படும் கொடிய வைரஸ் தாக்கியது. இந்த வைரசால் புதுவித நிமோனியா நோய்க்கு ஆட்பட்ட அவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இந்த நோய் தீவிரமடைந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இந்த வைரஸ் சீனாவின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஹுபெய்யை சுற்றியுள்ள மாகாணங்களிலும் பெருத்த சேதங்களை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது.

இதுவரை இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் 2,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 461 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், மேலும் 1300 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வூஹானில் இருக்கும் 250-க்கும் அதிகமான இந்தியர்களை வெளியேற்ற சீனா அரசாங்கத்திடம் இந்தியா கேட்டுக்கொள்ளவிருக்கிறது. வூஹான் வைரஸ் தொற்றுப் பிரச்சினையையொட்டி இந்தியா அந்த முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை யாருக்கும் வைரஸ் தொற்றியதாகத் தகவல் இல்லை. மேலும் வூஹானில் இருந்து இந்தியா திரும்பிய 11 பேரில் 4 பேருக்கு பாதிப்பில்லை என மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) 24X7 ஹெல்ப்லைனை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் ஹெல்ப்லைன் எண்: + 91-11-23978046


Share this News:

Leave a Reply