திமுக எம்.எல்.ஏ மரணம் – ஜவாஹிருல்லா இரங்கல்!

380

சென்னை (10 ஜூன் 2020): கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சுமார் 13 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க.வின் தென்சென்னை மாவட்டச் செயலாளராக சீரிய முறையில் பணியாற்றிய திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் அவர்கள் இன்று காலை மரணமடைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

சென்னை மாவட்ட திமுகவின் தளகர்த்தர்களில் ஒருவராக விளங்கியவர் ஜெ. அன்பழகன். ஆற்றல் மிக்க செயல்வீரராக விளங்கியவர். துணிச்சலாகத் தனது கருத்துகளை பதிவு செய்வதில் தனி முத்திரை பதித்தவர் ஜெ. அன்பழகன். 2011-16 காலகட்டத்தில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது சட்டமன்றத்தில் ஆளும் கட்சியின் தவறுகளை வீரியத்துடன் எதிர்த்து மக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்தவர் ஜெ. அன்பழகன். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகி தன் தொகுதி மக்களுக்கு சிறப்பான சேவை செய்தவர்.

இதைப் படிச்சீங்களா?:  விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது திருமாவளவன் ஒழுங்கு நடவடிக்கை!

கொரோனா நிவாரணங்களை மக்களுக்கு வினியோகிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நேரத்தில் ஜெ. அன்பழகன் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தனது இறுதி மூச்சு வரை மக்கள் சேவையில் ஈடுபட்டு வந்த ஜெ. அன்பழகனின் இறப்பு அவரது தொகுதி மக்களுக்கும் தென் சென்னை மாவட்டத்திற்கும் தி.மு.க.விற்கும் பேரிழப்பாகும்.

ஜெ. அன்பழகன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், திமுக தோழர்கள் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.