தினமணியின் நேர்கொண்ட பார்வை தகனம் செய்யப் பட்டுவிட்டது – ஜவாஹிருல்லா பகிரங்க கடிதம்!

சென்னை (04 ஏப் 2020): மததுவேஷத்துடன் வந்துள்ள தினமணியின் தலையங்கத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மமக தலைவர் பேரா. ஜவாஹிருல்லா தினமணிக்கு பகிரங்க கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

இதுகுறித்த அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

‘மன்னிக்கக்கூடாத குற்றம்’ என்ற தலைப்பில் 4.4.2020 தேதியிட்ட தினமணியின் தலையங்கம், உண்மைக்குப் புறம்பானதாகவும், மதவெறுப்பை விதைப்பதாகவும் அமைந்துள்ளது.

மனிதகுலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாகக் கிளம்பியுள்ள கோவிட்-19 என்ற கொரோனா தீநுண்மிக்கெதிராக சாதி, மத, தேச எல்லைகள் கடந்து உலகு தழுவிய அளவில் மனித சமுதாயம் ஒன்றுபட்டு போராட வேண்டிய வேளையில்,

தப்லீக் ஜமாஅத் நடத்திய நிகழ்ச்சிதான் இந்தியா முழுவதும் இந்த நோய்க்கிருமி பரவக் காரணம் என்று சித்திரிப்பதும், உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இந்த அமைப்புக்கும் தொடர்புள்ளது என்றும், மதத் தீவிரவாதத்தின் நாற்றங்காலாக தப்லீக் ஜமாஅத் செயல்பட்டு வருகிறது என்றும் தினமணி தலையங்கத்தில் எழுதியிருப்பது, பாசிச மதவெறியின் உச்சத்தில் நின்று உரைக்கப்பட்ட அவதூறுகளின் அணிவகுப்பாகவே உள்ளது.

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பலமுறை அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அடிப்படை கொள்கைகளில் வெளிப்படுகின்ற மதவெறியும், அவ்வமைப்பும் அதன் கிளைகளாகிய சங்பரிவார அமைப்புகளும், தங்களது பாசிசக் கொள்கையை நிலைநாட்ட இந்நாட்டையே பலமுறை கலவரக் காடாக மாற்றியுள்ளனர்.

அந்த மதவெறிதான் தேசப்பிதா அண்ணல் காந்தியடிகளின் இன்னுயிரையும் பறித்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படவும், பலகோடி மக்கள் வாழ்வாதாரங்களை இழக்கவும் சங்பரிவாரத்தின் கொள்கைகள் காரணமாக இருந்து வருகின்றன.

தப்லீக் ஜமாஅத் ஓர் அரசியல் சாராத ஆன்மீக அமைப்பாகும். இவ்வமைப்பு நம்நாட்டிலும், பிற நாடுகளிலும் தடை செய்யப்பட்டதில்லை. இதன் கருத்துகளில் எந்த சமயத்தினருக்கெதிரான வெறுப்பு பரப்புரைகளும் இல்லை. இந்த அமைப்புக்கு எதிராக உளவுத்துறை கூட அறிக்கை தரவில்லை. எந்த அரசும் இவ்வமைப்பை இதுவரைக் குற்றம் சாட்டியதுமில்லை.

உண்மை இவ்வாறிருக்க,தப்லீக் ஜமாஅத் குறித்து சங்பரிவார கும்பல்கள் பரப்பி வருகின்ற அவதூறுச் செய்திகளின் அடிப்படையில், தினமணியின் தலையங்கம் அமைந்திருப்பது கண்டனத்திற்குரியது.

தப்லீக் மாநாட்டிற்கு வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால்தான் இந்தியாவில் தொற்று பரவியது என்றால், அவர்களை நம்நாட்டில் அனுமதித்தது யார் குற்றம்? ஜனவரி 30 அன்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் கொரோனா அபாயம் உலக நாடுகளை பாதிக்கும் என்று அறிவித்தவுடன் சர்வதேச விமானப் போக்குவரத்துகளை நிறுத்தி, வெளிநாட்டவர்கள் நம்நாட்டிற்குள் வர முடியாதபடி தடுத்து நிறுத்தியிருக்க வேண்டிய கடமையிலிருந்து மத்திய பாஜக அரசு தவறியிருப்பதை ஏன் கண்டிக்கத் தயங்குகிறீர்கள்?

தப்லீக் ஜமாஅத் நடத்திய சர்வதேச மாநாடுதான் கொரோனா தொற்று பரவக் காரணம் என்ற கூற்று உண்மையெனில் அதில் மத்திய அரசுக்குக் கூட்டுப் பொறுப்பிருப்பதை யாரும் மறுக்க முடியாது.

ஓராண்டுக்கு முன்னரே திட்டமிடப்பட்டிருந்த இந்த மாநாடு மார்ச் 22.2020 அன்று இந்தியப் பிரதமர் ஊரடங்கை அறிவித்த உடனேயே நிறுத்தப்பட்டுள்ளது.

தொடர்வண்டிகள் உள்ளிட்ட போக்குவரத்துகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால், இந்நிகழ்வுக்கு வந்தவர்கள் உடனடியாகத் தங்கள் ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்துள்ளனர். மக்கள் ஊரடங்கு மார்ச் 22.2020 முடிந்த உடனேயே டெல்லி முதல்வர் மார்ச் 31.2020 வரையிலான ஊரடங்கை அறிவித்து விட, மாநாட்டுக்கு வந்தவர்கள் அவ்வளாகத்திலேயே சிக்கிக் கொண்டனர்.

மார்ச் 24, அன்று ஹஜ்ரத் நிஜாமுதீன் காவல் நிலையத்தில் நிலைமையை விளக்கி, மாநாட்டுக்கு வந்தவர்கள் திரும்புவதற்கு 17 வாகனங்களின் பதிவெண்களை வழங்கி தப்லீக் ஜமாஅத்தினர் அனுமதி கோரியுள்ளனர். அதற்கு அனுமதி தரப்படவில்லை.

மார்ச் 25.2020 வட்டாட்சியர் மருத்துவக் குழுவுடன் மர்கஸ் வளாகத்திற்கு வந்து ஆய்வு செய்துள்ளார். மார்ச் 26.2020 மாவட்ட உதவி நீதிபதி பார்வையிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு தப்லீக் ஜமாஅத் நிர்வாகம் முழுமையாக ஒத்துழைப்புத் தந்துள்ளது.

ஆனால் தங்களின் தலையங்கம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பாகவும், உள் நோக்கத்தோடும் எழுதப்பட்டுள்ளது.

கொரோனா அபாயம் உலகளாவிய அளவில் எழுந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வருகையை முன்னிட்டு, மத்திய அரசால் லட்சக்கணக்கான மக்கள் திரட்டப்பட்டனர்.

தமிழகத்தில் ஜக்கி வாசுதேவ் நடத்திய சிவராத்திரி நிகழ்வில் பல்லாயிரம் பேர் பங்கேற்றனர்.

மாதா அமிர்தானந்தமயி கேரளத்தில் நடத்திய நிகழ்வில் ஏராளம்பேர் பங்கேற்றனர்.

மத்திய அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்த பிறகு உ.பியின் முதல்வர் யோகி ஆதித்யநாத், பல்லாயிரம் பாஜகவினர் பங்கேற்ற நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் பூஜை நடத்தினர். கர்நாடக முதல்வர் எடியூரப்பா பெருந்திரளாக மக்கள் பங்கேற்ற திருமணத்தில் பங்கேற்றார்.

லண்டனிலிருந்து நடிகை கனிகா கபூர் கொரோனா தொற்றோடு திரும்பி பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதில் பாஜக தலைவர்கள் வசுந்தரா ராஜே, அவரது மகன் துஷ்யந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு அவர்கள் நாடாளுமன்ற நிகழ்வுகளிலும் பங்கேற்றனர்.

மேற்கண்ட நிகழ்வுகளெல்லாம் கொரோனாவைப் பரப்ப வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு நடத்தப்பட்டவையா?

16 ஆம் தேதி முதல் 50 பேருக்கு மேல் கூடும் எந்தக் கூட்டமும் டில்லியில் நடத்த அனுமதியில்லை என்றால், 23 ஆம் தேதி வரை பாராளுமன்றம் நடந்ததே அது எப்படி? பாராளுமன்றம் டில்லியில் இல்லையா? மொத்த பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் இரு அவையையும் சேர்த்து 48 பேரா? அதனால் டில்லி அரசாங்கம் சகித்துக் கொண்டதோ! இல்லை M.P.கள் சாமானிய மக்களில் கணக்கெடுக்கப்பட மாட்டார்களா!

அவை எதார்த்தமான மனிதத் தவறுகள் என்றால், தப்லீக் ஜமாஅத் நிகழ்ச்சி மட்டும், ஏன் கொரோனா கிருமியைப் பரப்பும் நோக்கில் நடத்தப்பட்டது போல சித்திரிக்கப்பட வேண்டும். இது அப்பட்டமான மதவாதப் பார்வையை அன்றி ஏ என் சிவராமனும், இராம. சம்பந்தனும் எழுதிய தலையங்களில் இருந்த நேர்கொண்ட பார்வை இல்லை. தினமணியின் நேர்கொண்ட பார்வை அதன் தற்போதைய ஆசிரியர் வைத்தியநாதனால் இன்று தகனம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்:

ஈரோடு இடைத்தேர்தல் – காங்கிரஸ் வேட்பாளர் இவர்தான்!

புதுடெல்லி (22 ஜன 2023): ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வே.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா, ஜனவரி 3-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அத்தொகுதி...

வாரிசு குடும்பத்தில் விரிசலா?

சென்னை (23 ஜன 2023): நடிகர் விஜய்-க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் லடாய் என்பதாக அவ்வப்போது தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இந்த லடாய்க்குப் பின்னணியில் ஒரு பிரபல நடிகை இருப்பதாக...

சவூதியில் வீட்டு வேலை செய்பவரின் இக்காமாவை மூன்று மாதத்திற்கு புதுப்பிக்க முடியுமா?

ரியாத் (27 ஜன 2023): சவூதி அரேபியாவில் பணியாளர்கள் விசாவில் இருப்பவர்கள் 3, 6 மாதங்கள் மற்றும் ஒரு வருடத்திற்கு இக்காமாவை புதுப்பிக்கலாம் ஆனால் வீட்டு விசாவில் உள்ளவர்கள் ஒரு வருடத்திற்கு மட்டுமே...