துரைமுருகனுக்கு திமுக தலைவர் பதவி – ஜெயக்குமார் கேள்வி!

Share this News:

சென்னை (23 ஜன 2020): திமுக தலைவர் பதவியை துரைமுருகனுக்கு ஸ்டாலின் விட்டுக் கொடுப்பாரா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் முதல்-அமைச்சர் ஆகலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பதிலளிக்கையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்-அமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பாரா? என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அதையே நான் திருப்பிக் கேட்கிறேன். அ.தி.மு.க.வில் அடிமட்ட தொண்டன் கூட கொடி கட்டிய காரில் வர முடியும். நாங்கள் எல்லோரும் அப்படித்தான்.நாங்கள் மிட்டா மிராசுதாரர் கிடையாது. எங்களுக்கென்று பெரிய பாரம்பரியம் கிடையாது. நாங்கள் எல்லோரும் கொடி கட்டிய காரில் பவனி வருகிறோம் என்று சொன்னால் அதற்கு காரணம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாதான்.

எனவே முதல்-அமைச்சர் சொன்னது, ஒரு கடைக்கோடி தொண்டன் என்ற அடிப்படையில் யார் வேண்டுமானாலும் முதல்-அமைச்சராக வரலாம். அதற்கு சாட்சியாகத்தான் இன்று முதல்-அமைச்சராக நான் வந்திருக்கிறேன் என்றார். ஒரு கிளைச் செயலாளராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி இன்று முதல்-அமைச்சராக வந்திருக்கிறார் என்று சொன்னால் அந்த அளவுக்கு கட்சிக்காக உழைத்துள்ளார்.

எம்.ஜி.ஆர். கூறியதை போல, உழைப்பவரே உயர்ந்தவர் என்கிற தாரக மந்திரபடி இன்று உயர்ந்த பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார். அதுபோல தான் அ.தி.மு.க.வில் எல்லோரும் வர முடியும். கடைக்கோடி தொண்டனும் வர முடியம் என்பதை தான் அவ்வாறு குறிப்பிட்டார்.

ஆனால் தி.மு.க.வில் அதற்கான சாத்தியக்கூறு உண்டா? முதலில் துரைமுருகனை கேட்கிறேன். தி.மு.க.வில் பொருளாளராக இருக்கும் நீங்கள் தி.மு.க. தலைவராக வரலாமே? மு.க.ஸ்டாலின் தலைவர் பதவியை விட்டுக் கொடுப்பாரா அல்லது துரைமுருகன்தான் முதல்-அமைச்சர் என்று மு.க. ஸ்டாலின் அறிவிப்பாரா?

எனவே தி.மு.க.வில் எதுவும் சாத்தியம் இல்லை. தி.மு.க.வில் அவரது தந்தை, மகன், மகனுக்கு மகன், உதயநிதிக்கு பேரன் இப்படித்தான் வாரிசு அரசியல் தொடரும். அ.தி.மு.க.வில் அப்படி அல்ல.” என்றார்


Share this News:

Leave a Reply