கொரோனா தடுப்பு – கலக்கும் கேரளமும் தமிழகமும்!

601

சென்னை (31 மார்ச் 2020): கொரோனா வைரஸ் இந்தியாவில் முதல் முதலாக அடி எடுத்து வைத்த மாநிலம் கேரளா. தற்போது அங்கு 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.

கொரோனா இந்தியாவில் பரவ ஆரம்பித்தவுடனேயே தற்காப்பு நடவடிக்கைகளில் களம் இறங்கிவிட்டது தமிழகம். கேரளா ஏற்கனவே எபோலா வைரஸால் பாதிக்கப்பட்ட அனுபவம் இருப்பதால் கேரளா மேற்கொண்ட தடுப்பு மற்றும் மருத்துவ நிவாரண முறைகளைக் கண்டு வியந்தவர்கள் அதே போன்று தங்கள் மாநிலத்திலும் நடை முறைப்படுத்துகின்றனர். அந்த வகையில் தமிழகமும் அதனை ஓரளவுக்கு பின்பற்றி வருகிறது.

வெளிநாடுவாழ் இந்தியர்களை அதிக அளவில் கொண்ட மாநிலமான கேரளா, கொடூர கொரோனாவின் தாக்கத்திலும் முதன்மையிலிருக்கிறது. ஆனாலும் துவண்டுவிடாத பினராயி விஜயன் தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் துணிச்சலாகவே மேற்கொள்கிறார். ஏனெனில் வெளிநாட்டிலிருக்கும் மலையாளிகள் தங்களின் தாயகம் வந்து போவதுதான் அடிப்படைக் காரணம்.

மார்ச் 20-ல் மட்டும் ஒரே நாளில் பிரிட்டிஷ், துபாயிலிருந்து வந்தவர்களால் காசர்கோட்டில் 6 பேர், எர்ணாகுளத்தில் 5 பேர், பாலக்காட்டில் ஒருவர் என 12 பேருக்கு கொரோனா பாஸிட்டிவ் என்று கண்டறியப்பட்டு “ஐஸோலேஷன்’ எனப்படும் தனிமைப்படுத்தும் வார்டின் அதிதீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டவர்களின் கொரோனா பாஸிட்டிவ் எண்ணிக்கை 52.

மாநிலம் முழுவதும் அந்தந்த மாநிலங்களின் மருத்துவர்களின் கண்காணிப்பிலிருப்பவர்கள் (வீடுகளில்) சுமார் பல ஆயிரம் பேர்கள். இவர்களில் 3 ஆயிரம் பேர்கள் அவரவர்களின் வீடுகளிலேயே தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு அந்தந்த சரகத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவப் பணியாளர்களால் அன்றாடம் கவனிக்கப்பட்டு வருகின்றனர். மாநிலமே பினராயி விஜயனுக்கு தோளுக்குத் தோள் நிற்கிறது. மட்டுமல்ல மூன்றாம் நிலையில் கொரோனாவின் தாக்கம் வீரியம் கொண்டவையாக இருக்கும் என்பதால் பலவிதமான முன்னேற்பாடுகள்.

‘பிளான்-ஏ’ திட்டப்படி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று 40 படுக்கைகள், ‘பிளான்-பி’யில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 500 படுக்கைகள், ‘பிளான்-சி’ படி நட்சத்திர ஹோட்டல்கள், பழைய மருத்துவமனைகள், தேர்வு செய்யப்பட்ட பள்ளிகள் போன்றவைகளை ஒருங்கிணைத்து சுமார் 3 ஆயிரம் படுக்கைகள் எனப் பக்காவாக அமைக்கப்பட்டு மருத்துவர்கள், உபகரணங்கள் என்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொல்லம் மாவட்டத்தில் மட்டும் இப்படி என்றால் மாநிலத்திலுள்ள 19 மாவட்டங்களிலும் இதே போன்று நடவடிக்கைகள். வரும் மூன்றாம், நான்காம் நிலைகளில் கொரோனாவின் தாக்கம் கடுமையாகலாம், பாதிப்புகளின் எண்ணிக்கையும் உயர வாய்ப்பு என்பதால் இந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

50 கோடி மதிப்பீட்டில் ஏப்ரலில் மாநிலம் முழுவதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவகங்கள் ஏற்படுத்தப்பட்டு அவற்றில் மக்களுக்காக இருபது ரூபாய் குறைந்த கட்டணத்தில் உணவு விநியோகம் செய்யப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் புனரமைப்பிற்காக அவர்களின் மருத்துவச் செலவிற்காக ஐந்நூறு கோடி தயார் நிலையில். கேரளா முழுவதிலும், நிறுத்தி வைக்கப்பட்ட காண்ட்ராக்ட் பணிகளின் பில் தொகை ஏப்ரலில் செட்டில் செய்யப்படுவதற்காக ஒதுக்கப்பட்ட தொகை பதினான்காயிரம் கோடி.

கொரோனா தாக்க நேரத்தில் ஆட்டோக்கள் சிறப்பாகச் செயல்பட்டதால் மாநிலம் முழுவதிலுள்ள ஆட்டோக்களுக் கான பிட்னஸ் சார்ஜ் எனப்படும் எப்.சி. கட்டணத்தில் முழு விலக்கு.

சிறு வாடகை வாகனங்கள், ஒப்பந்தப் பேருந்துகளுக்கு அரசு வரிக்கட்டணம் குறைப்பு. போக்குவரத்து டாக்ஸிகள் கட்டுகிற மூன்று மாதத்திற்கான அரசு வரிக்கட்டணத்தின் கால அவகாசம் நீட்டிப்பு. மாநிலம் முழுவதிலும், மின்கட்டணம், குடிநீர்க்கட்டணம் செலுத்துவதில் ஒரு மாதம் அலவன்ஸ் அளிக்கப்படுகிறது. தவிர, கேரளாவிலுள்ள அனைத்து திரையரங்குகளின் கேளிக்கை வரியினைக் குறைப்பதற்காகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் மேலாக, மாநில வங்கிகளின் அமைப்புச் செயலாருடன் பேசிய முதல்வர் பினராயி விஜயன் கேரளாவின் அனைத்து வங்கிகளிலும், கடன் பெற்றவர்களிடம் ஒரு வருடம் கடன் தொகையைக் கேட்டு நிர்ப்பந்திக்கக் கூடாது. பாக்கித் தவணைக்காக அவர்களின் இடங்களை ஜப்தி செய்யவும் கூடாது என்று வலியுறுத்தியதை வங்கிகளின் சம்மேளனம் ஏற்றுக் கொண்டுள்ளது.

சுற்றுலா, எஸ்டேட் தொழில், அண்டிப்பருப்பு தொழிற்சாலைகள் உள்ளிட்ட சிறு நிறுவனங்களின் மூலமாகவே சொற்ப அளவிலான வருமானத்தைக் கொண்ட கேரளா, இந்த பேரிடரில் இத்தனை பெரிய தொகையை நிவாரணமாகக் கடுமையான நிதி நெருக்கடிக்கிடையிலும் நடைமுறைப்படுத்துவது அசாதாரணம் என்கிறார்கள். இவைகளனைத்தையும் சுட்டிக்காட்டி தங்களின் மாநிலத்திற்கு முறையாக வரவேண்டிய நிலுவை நிதியினை உடனே விடுவிக்கவேண்டும் என்று மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார் பினராயி விஜயன்.

இதனிடையே கேரள காவல்துறை கொரோனா தடுப்பு முறை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாஸ்க் அணிந்து கைகளில் சோப்பு கொண்டு கழுவும் முறையைக் காவலர்கள் குரூப் டான்ஸ் ஆடிக்கொண்டு கானாபாட்டுப் பாடியபடி குத்தாட்டம் மூலம் வெளிப்படுத்தும் வீடியோ வைரலாகியுள்ளது.

இரு பெரும் மழை வெள்ளங்களால் சிதைக்கப்பட்ட கேரளாவைப் பல்வேறு வழிகளில் புனரமைத்து மீட்டெடுத்த பினராயி விஜயன், கொடூரக் கொரோனாவின் தாக்கத்திலும் மீட்டெடுக்க அசுரபலத்துடன் போராடி வருகிறார். கேரளாவை பார்த்து தமிழக முதல்வரும் தமிழக மேம்பாட்டிற்கு முன்னெடுப்புகளை எடுத்து வருவது பாராட்டுக்குரியது.