கேரளா தொடர் கொலை – கோவையில் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

கேரளா தொடர் கொலை – கோவையில் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

கோவை (20 டிச 2021): கேரளாவில் எஸ்டிபிஐ மற்றும் பாஜக பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து கோவையில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.

கேரளா, ஆலப்புழாவில் எஸ்.டி.பி.ஐ., கட்சி மாநில செயலர் ஷான் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்து, 12 மணி நேரத்துக்குள் பா.ஜ.,வை சேர்ந்த ரஞ்சித் ஸ்ரீனிவாசன் என்பவரை மர்ம நபர்கள் கொலை செய்தனர்.

இதனால் தமிழ்நாடு உட்பட பிற மாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கோவையில் அனைத்து உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு போலீஸ் ஆணையர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ‘கேரளாவில் நடந்த சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த சம்பவத்துக்கு எதிர்வினையாக மாற்று மதத்தினர் அல்லது கட்சியின் முக்கிய நபர்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்துத் தாக்கி, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இதனால் அனைத்து உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கேரளா சம்பவத்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில், சில அமைப்பினர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற தேவையில்லாத பதிவுகளைப் பகிர்ந்து, பதற்றத்தை ஏற்படுத்தினால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை போலீசார் எச்சரித்துள்ளனர். கோவையைச் சேர்ந்த நபர்களின் சமூகவலைதள பதிவுகளையும் போலீசார் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.

ஹாட் நியூஸ்: