இதைவிடவா எழுச்சி வேண்டும்? -ரஜினிக்கு மன்சூர் அலிகான் கேள்வி!

646

சென்னை (14 மார்ச் 2020): தமிழகத்தில் இப்போது ஏற்பட்டிருக்கும் எழுச்சி போதாதா? என்று நடிகர் மன்சூர் அலிகான் ரஜினிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்குவது குறித்த தனது நிலைப்பாடு குறித்து விளக்கினார். அப்போது எழுச்சி ஏற்பட்டால் அரசியல் கட்சி தொடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து நடிகர் மன்சூர்அலிகான் தெரிவிக்கையில், “தமிழ்நாட்டில் மத்திய அரசை எதிர்த்து விவசாயிகள் போராடியது எழுச்சியாகத் தெரியவில்லையா? மீத்தேன், ஹைட்ரோகார்பனை எதிர்த்து போராடி விவசாயி செத்தே போயிட்டான். மீத்தேன், ஹைட்ரோகார்பனை எதிர்த்து விவசாயிகள் போராடியது மக்கள் எழுச்சியாகத் தெரியவில்லையா? அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் 100 நாள் போராட்டம் நடத்தினார்களே விவசாயிகள், அது எழுச்சியாகத் தெரியவில்லையா?

இதைப் படிச்சீங்களா?:  வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி - கனமழைக்கு வாய்ப்பு!

இந்தியா முழுவதும் சிஏஏவை எதிர்த்து போராடுகிறார்களே அது மக்கள் எழுச்சியாகத் தெரியவில்லையா? டெல்லி ஷாகின் பாக் பகுதியில் தொடர்ந்து மூன்று மாதமாக போராடுவது மக்கள் எழுச்சியாகத் தெரியவில்லையா? அந்த போராட்டத்தில் 70 வயதை தாண்டிய பெண்களும் பங்கேற்றிருப்பது எழுச்சியாகத் தெரியவில்லையா? அந்தப் போராட்டத்தில் இருப்பவர்களை ரஜினியின் நண்பரான பிரதமர் மோடி போய் பார்க்கவே இல்லையே?

நம்ம அப்பா, தாத்தாக்களுக்கு பிறப்பு சான்றிதழ் கேட்கிறார்கள். அதுகுறித்து ரஜினி கேள்வி எழுப்பியிருந்தால் நம்ம தலைவர் கேட்டுவிட்டார் என்று மக்கள் எழுச்சி வந்திருக்கும். கேள்வி கேட்டாரா? அவரால் எந்த மாற்றமும் வராது. அவர் அனைத்தையும் திசை திருப்புகிறார்.” இவ்வாறு மன்சூர் அலிகான் தெரிவித்தார்.