கொரோனா நோயாளிகளை மருந்தே இல்லாமல் குணப்படுத்தியுள்ளோம் : அமைச்சர் விஜயபாஸ்கர்!

Share this News:

சென்னை (27 ஜூன் 2020): 40 ஆயிரம் கொரோனா நோயாளிகளுக்கு மருந்தோ, ஊசியோ இல்லாமல் குணப்படுத்தியுள்ளோம் என்று சுகாதராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மருத்துவக் கல்லூரி டீன் குந்தவி தேவி ஆகியோர் கலந்து கொண்ட நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

அப்போது அமைச்சர் கூறும்போது, “விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று மாதங்களாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் நோய் தடுப்பு பணியில் 24 மணி நேரமும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மாவட்டத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 697 பேர். இதில் 430 குணமடைந்துள்ளனர். 265 பேர் சிகிச்சையில் உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் அதிக அளவில் மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோயிலிருந்து தமிழகத்தில் மட்டும் இதுவரை 40,000 பேர் எவ்வித மருந்து மாத்திரை ஊசி இல்லாமலேயே குணப்படுத்தி உள்ளோம். தமிழகத்தில்தான் குறைந்த இறப்பு விகிதத்தை பராமரித்து வருகிறோம். விலை உயர்ந்த வீரியமிக்க மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ கார்ப்பரேஷன் மூலம் வரவழைத்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போதிய அளவிற்கு மருந்துகள் கையிருப்பில் உள்ளது. அதேபோன்று மருத்துவர்கள் பயன்படுத்தும் கையுறை மாஸ்க் கிருமிநாசினிகள் தொடர்ந்து தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதலாக டாக்டர்கள், பணியாளர்கள் நியமிக்க முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார். எனவே கரோனாவிலிருந்து மக்களை பாதுகாத்து ஒற்றுமையுடன் நோயிலிருந்து வெளியே வருவோம்” என்று கூறினார்.


Share this News: