நீட் தேர்வில் தொடரும் ஆள் மாறாட்டம் – இன்னும் எத்தனை பேர் சிக்குவார்களோ?

Share this News:

கோவை (26 செப் 2019): நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்கள் இன்னும் எத்தனை பேர் சிக்குவார்களோ? என்று தெரியவில்லை.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த உதித் சூர்யா என்பவர் கைது செய்யப் பட்டார்.  இதை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர்களின் ஆவணங்களைச் சோதனை செய்ய, மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, கோவையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் சோதனை செய்தபோது, நீட் தேர்வு மதிபெண் அட்டையில் உள்ள புகைப்படத்துக்கும் தற்போதைய புகைப்படத்துக்கும் மாறுதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு, பி.எஸ்.ஜி கல்லூரி இதுதொடர்பாகக் கடிதம் அனுப்பியுள்ளது. ஒரு மாணவன், ஒரு மாணவி என்று மொத்தம் இரண்டு மாணவர்களின் புகைப்படங்களில் மாறுதல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. தர்மபுரி மற்றும் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த இந்த மாணவர்கள் சி.பி.எஸ்.இ பள்ளியில் படித்தவர்கள்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தகுதி சான்றிதழை வழங்கியுள்ளது. மருத்துவக் கலந்தாய்வின்போது, மாணவர்களின் புகைப்படங்களை அதிகாரிகள் சரியாக சோதனை செய்யவில்லை என்றும் புகார் கூறப்படுகிறது.

ஆனால்,“சான்றிதழ்களில் பழைய புகைப்படங்களை ஒட்டியிருப்பார்கள் என்பதால், அதை வைத்து ஆள்மாறாட்டம் என்று உறுதிப்படுத்த முடியாது.

ஆவணங்களை மீண்டும் சரிபார்க்க உள்ளோம். ஆள்மாறாட்டம் உறுதியானால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது போலீஸில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் மற்றும் பி.எஸ்.ஜி கல்லூரி தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply