கோவையில் கோவிலுக்கு சென்ற முஸ்லிம் ஜமாத்தினர்!

Share this News:

கோவை (04 நவ 2022): கோயம்புத்தூரில் முஸ்லிம் ஜமாத்தினர் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று அங்குள்ள நிர்வாகிகளை சந்தித்துப் பேசினர்.

கோவை மாவட்டம் உக்டத்தில் கடந்த 23-ம் தேதி காரில் சிலிண்டர் வெடிப்பு நடந்த இடத்திற்கு அருகே உள்ள கோயிலில் மத நல்லிணக்க சந்திப்பு நடைபெற்றது. அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் இனையத்துல்லா தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் சங்கமேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் மற்றும் கோயில் பூசாரி உள்ளிட்டோரை சந்தித்தனர். அவர்களுக்கு கோயில் சார்பில் அங்க வஸ்திரம் அணிவித்து சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட அனைத்து ஜமாத் கூட்டமைப்பினர், நூற்றாண்டு பழமை வாய்ந்த மூன்று பள்ளிவாசல் நிர்வாகிகள் மத நல்லிணக்க அடிப்படையில் கோயிலுக்கு வருகை புரிந்ததாகவும், கோயில் நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார். கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு கோவையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவத்தை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.

வன்முறையை ஒருபோதும் இஸ்லாம் ஏற்காது என்றார். கோட்டைமேடு பகுதியில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வருவதாகவும் தங்களை மத பூசலுக்கும் அரசியலுக்கும் உட்படுத்த வேண்டாம் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறினார். தங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த கோயில் நிர்வாகத்திற்கு நன்றி என்றும் தெரிவித்தார்.

மேலும் தீவிரவாதத்திற்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம் எனவும் கோயில் பூசாரிகள் தங்களுடைய சகோதரர்கள் என்றும் உறுதியளித்தனர். இந்து-முஸ்லிம் ஒற்றுமையை கோவையில் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது எனவும் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் தேர் திருவிழா நடக்கும் போது இஸ்லாமியர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்ததை நினைவு கூற வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.


Share this News:

Leave a Reply