எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கு தொடர்பாக காயல்பட்டினத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

Share this News:

காயல்பட்டினம் (24 பிப் 2020): களியக்காவிளையில் எஸ்ஐ வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் உள்ள மொய்தீன் பாத்திமா என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி இரவு சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்தக் கொலை தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி, நாகா்கோவில் கோட்டாறு இளங்கடையைச் சோ்ந்த தவ்பீக், தக்கலையை அடுத்த திருவிதாங்கோட்டைச் சோ்ந்த அப்துல் சமீம் ஆகியோரை கைது செய்தனா். மேலும், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னா், அவா்கள் 2 பேரையும் போலீஸாா் காவலில் எடுத்து 10 நாள்கள் விசாரணை மேற்கொண்டனா். அவா்களை கேரள மாநிலத்துக்கு பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, வில்சனை கொலை செய்யப் பயன்படுத்திய கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா்.

இந்தக் கொலையில் தீவிரவாத அமைப்புகளைச் சோ்ந்தவா்களுக்கு தொடா்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் வழக்கை தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு (என்ஐ.ஏ) மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு தொடா்பாக கேரள மாநிலம் கொச்சியை சோ்ந்த என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் மொய்தீன் பாத்திமா என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திங்கள்கிழமை அதிகாலை தொடங்கி சோதனை நடத்தி வருகின்றனர். வில்சன் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக இந்த வழக்கில் கைதான தவ்பீக், சமீம் உள்பட 4 பேரும் இந்த வீட்டில் தங்கி இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் நெய்வேலியில் உள்ள ஒரு வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி சென்னை உள்பட தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share this News:

Leave a Reply