சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கொரோனா உயிரிழப்பு எதுவும் இல்லை!

Share this News:

சென்னை (12 ஜூலை 2021): சென்னையில் நான்கரை மாதங்களுக்குப் பிறகு இன்று கொரோனா உயிரிழப்பு எதுவும் இல்லை.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 2 வது அலை தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் கோவை, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் தினசரி நோய் தொற்று ஏற்ற இறக்கங்களோடு இருந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த மே மாதம் தினசரி பாதிப்பு உச்சத்தை தொட்டு இருந்தது. மே 12-ந்தேதி அன்று அதிகபட்சமாக 7,564 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

உயிரிழப்புகளும் கடந்த மே மாதம் அதிகமாகவே இருந்து வந்தது. மே 5-ந்தேதி அன்று 107 பேர் அதிகபட்சமாக சென்னையில் உயிரிழந்திருந்தனர். அன்று தமிழகம் முழுவதும் தினமும் 500 பேர் வரையில் கொரோனாவுக்கு பலியாகி வந்தனர். இந்த உயிரிழப்புகள் படிப்படியாக குறைய தொடங்கியது. கடந்த மாதம் 1-ந் தேதியில் இருந்து தினசரி பாதிப்பு குறைந்தது போன்று உயிரிழப்புகளும் குறைய தொடங்கின.

அந்த வகையில் சென்னையில் கடந்த மாதம் முதல் வாரத்தில் கொரோனா உயிரிழப்பு படிப்படியாக குறைந்தது. கடந்த மாதம் 6-ந் தேதி அன்று 50 பேர் உயிரிழந்து இருந்தனர். இதன் பிறகு ஒவ்வொரு நாளும் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்தது. கடந்த மாத இறுதியில் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்தது. கடந்த மாதம் 23-ந் தேதி தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக சரிந்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் 47 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இதில் சென்னையில் யாரும் உயிரிழக்கவில்லை. கடந்த 4 1/2 மாதங்களுக்கு (139 நாட்கள்) பிறகு சென்னையில் கொரோனா உயிரிழப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் நோய் தடுப்பு பணியில் திருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் மாநிலம் முழுவதும் 2,775 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று சென்னையில் 177 பேருக்கு மட்டுமே நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையை போன்று மேலும் 19 மாவட்டங்களிலும் நேற்று யாரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை. அரியலூர், செங்கல்பட்டு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 19 மாவட்டங்களும் கொரோனா உயிரிழப்பு இல்லாத மாவட்டங்களாக மாறி உள்ளன.

தமிழகம் முழுவதும் நேற்று 47 பேர் பலியாகி இருந்த போதிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள 18 மாவட்டங்களிலும் ஒற்றை இலக்கத்திலேயே பலி எண்ணிக்கை உள்ளது. வேலூரில் 4 பேரும், திருப்பூர், திருவாரூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் பலியாகியுள்ளனர்.

ஈரோட்டில் 3 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். கடலூரில் 5 பேரும், கோவையில் 7 பேரும் பலியாகி உள்ளனர். நேற்றைய உயிரிழப்புகளில் சேலத்தில் மட்டுமே அதிகபட்சமாக 9 பேர் பலியாகி உள்ளனர். இதை தவிர்த்து நெல்லை, திருவள்ளூர், நீலகிரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் மட்டுமே உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply