முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 7 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை (22 பிப் 2022): திமுக நிர்வாகியைத் தாக்கிய வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மார்ச் 7 ஆம் தேதி வரை சிறையிலடைக்கநீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது, வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் வாக்களிக்கச் சென்ற திமுக தொண்டரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அ.தி.மு.க.வினர் அரை நிர்வாணமாக்கித் தாக்கியதாக, தண்டையார் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.வைச் சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, காவல்துறையினர் நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர். ஜெயக்குமாரை சேத்துப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சுமார் நான்கு மணி நேரத்திற்கு பின்பு நள்ளிரவில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதித்துறை நடுவர் முரளிகிருஷ்ணன் வீட்டில் ஆஜர்படுத்தினர். அவருக்கு வரும் 7ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஹாட் நியூஸ்: