வன்முறையைத் தூண்டும் சங்பரிவார் அமைப்புகள் மீது நடவடிக்கை – பாப்புலர் ப்ரண்ட் கோரிக்கை

Share this News:

சென்னை (15 ஜூலை 2020): தமிழகத்தின் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் தொடர்ந்து சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டு வரும் சமூக விரோதிகளையும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் சங்பரிவார் அமைப்புகளையும் அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.

இது சம்பந்தமாக பாப்புலர் ப்ரண்ட் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

சமீப காலங்களாக சமூக ஊடகங்களில் மத ரீதியான மோதல்களை உருவாக்கும் நோக்கோடு சில சமூக விரோதிகள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதேபோன்று சமூக தலைவர்களை இழிபடுத்தியும், ஊடகவியலாளர் மற்றும் அவர்களின் வீட்டு பெண்களை இழிபடுத்தியும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக எச்.ராஜா, கல்யாணராமன், கிஷோர் கே.சுவாமி, மாரிதாஸ் போன்றவர்கள் இதில் முன்னணியில் உள்ளனர்.
குறிப்பாக முஸ்லிம்களை தொடர்ந்து சீண்டுவதை இவர்கள் வழமையாக கொண்டுள்ளனர். அதன் தற்போதைய முயற்சியாக முஸ்லிம்கள் தங்களது உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் குறித்த கார்ட்டூன் வெளியிட்டு தனது மதவெறியை வெளிபடுத்தியுள்ளான் சமூக விரோதி வர்மா. கார்ட்டூனை வெளியிடுவேன் என்று கூறிய சுரேந்திர குமார் என்ற வர்மா கைது செய்யப்பட்ட பின்னரும் அந்த கார்ட்டூன் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்த ஒரு போதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த சமூக விரோதிகளை சட்ட ரீதியிலும், ஜனநாயக ரீதியிலும் தண்டனை பெற்று தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். இவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விழுப்புரம் மாவட்ட காவல் கண்கானிப்பாளரை சந்தித்து பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக புகார் மனு கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவனை பல்வேறு பிரிவுகளில் காவல்துறை உடனே கைது செய்தது வரவேற்கத்தக்கது. இருந்தாலும் இவன் மீது குண்டர் சட்டம் போட வேண்டும் என்ற கோரிக்கயை முன் வைக்கின்றோம். அதேபோல் இவன் கைதுக்கு பிறகும் அந்த கார்ட்டூன் வெளிவந்துள்ளது இது ஒரு தனி நபராக இல்லாமல் திட்டமிட்ட சதியாகவே தெரிகிறது. எனவே, கார்ட்டூனை வெளியிட்டவர்கள் மற்றும் உறுதுணையாக இருந்தவர்கள் என அத்தனை பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தொடர்ந்து சங்பரிவார கும்பல் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதற்கு காரணம் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து, மத மோதல்களை ஏற்படுத்தி, அதன் மூலம் அரசியல் இலாபம் அடைய வேண்டும் என்பதே ஆகும்.

வெறுப்பு மற்றும் சாதி, மத மோதல்களை தூண்டும் வகையில் இவர்கள் வெளியிடும் வீடியோ பதிவுகள், கார்ட்டூன்கள் மற்றும் பதிவுகள் ஆகியவை மக்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது. அமைதி தவழும் தமிழகத்தில் மத மற்றும் சாதி மோதல்களை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவர்களின் பதிவுகள் அமைந்திருப்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

தனி நபர்களாக இவர்கள் செயல்பட்டாலும் இவர்களின் பின்னணியில் மதவாத சங்பரிவார கும்பல் இருப்பது தெளிவாகும். மேலும், கடந்த காலங்களில் மதமோதல்களை உண்டாக்கும் நோக்கில் எச்.ராஜா, கல்யாணராமன் போன்றவர்கள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தனர். அப்போதெல்லாம் இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி பல்வேறு புகார்கள் மாநிலம் முழுவதும் கொடுக்கப்பட்ட போதும் அரசு இவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்காததன் விளைவே இவர்கள் தொடர்ந்து சுதந்திரமாகவும், தைரியமாகவும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக செயல்பட்டு வருகின்றனர்.

எனவே, தமிழக அரசு மாநிலத்தின் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து செயல்படும் இத்தகைய சமூக விரோதிகள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் சங்பரிவார அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இவர்களின் முகநூல் பக்கங்களை உடனே முடக்கவேண்டும் எனவும் மாநில அரசை பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது.

மேலும், தமிழகத்தில் பல்வேறு சாதி மற்றும் மதத்தை பின்பற்றக்கூடிய மக்களும் கடவுள் மறுப்புக் கொள்கை சார்ந்தவர்களும் பரஸ்பர புரிந்துணர்வுடன் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். மாநிலத்தில் நிலவி வரும் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை குலைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் தமிழக மக்கள் இந்த பிரிவினைவாத சக்திகளுக்கு பெரும்பாலும் முகம் காெடுப்பதில்லை. இருந்தபோதும் தங்களின் முயற்சிகளிலிருந்து பின்வாங்காமல் மக்களைப் பிளவுபடுத்தும் வேலைகளை தொடர்ந்து செய்து வரும் இது போன்ற சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அனைத்து ஜனநாயக சக்திகளும், சமூகமும் புறக்கணிக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கின்றது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News: