அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!

Share this News:

சென்னை (21 ஜூன் 2020): பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களீன் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால், கச்சா எண்ணெய் விலை கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெகுவாக குறைந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலர் என்ற நிலைக்கும் கீழ் சரிந்து வந்தது

. அப்போதெல்லாம், இந்தியாவில் விலை குறைப்பின் பலனை மக்களுக்கு கொடுக்காமல், வரியை மத்திய, மாநில அரசுகள் உயர்த்திக் கொண்டன. நடப்பு மாத தொடக்கத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

கடந்த 7ம் தேதியில் இருந்து இன்று 15வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்தது. நாடு முழுவதும் இன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 31 பைசாவும், ஒரு லிட்டர் டீசலுக்கு 51 பைசாவும் உயர்த்தப்பட்டது.

இதன்மூலம் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.58க்கும், டீசல் ரூ.75.80க்கும் விற்கப்பட்டது. 15 நாளில் பெட்ரோல் விலை ரூ.7.04ம், டீசல் விலை ரூ.7.58ம் வரலாற்றில் முதன்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இம்மாத இறுதிக்குள் புதிய உச்சத்தை தொடவுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90ஐ கடக்கும் எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் விலையேற்றத்தால், லாரி உரிமையாளர்கள் மற்றும் இதர வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.


Share this News: