உற்சாகம் இழந்த பெருநாள் – நாகூர் தர்காவில் கூட்டு பிரார்த்தனை!

Share this News:

நாகூர் (26 மே 2020): லாக்டவுனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினார்கள். இவ்வருட ரம்ஜான் பண்டிகை உற்சாகம் இழந்ததாகவே காணப்பட்டது.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு, ரமலான் மாத இறுதி நாளில் பிறை தெரியும். பிறை தென்பட்ட மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை திங்கள் கிழமை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவிப்பு வெளியிட்டார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதனால், மசூதிகள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில், இந்தியா முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழகம் உள்பட அனைத்து பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே தொழுகை நடத்தினார்கள். இதில் இஸ்லாமியர்கள் தங்களது வீட்டிலேயே குடும்பத்தோடும், உறவினர்களுடன் இணைந்தும் சிறப்புத் தொழுகையை மேற்கொண்டனர். தொழுகை முடிந்த பின்னர் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கமான உற்சாகத்துடன் இப்பண்டிகையை கொண்டாட முடியவில்லை. மிகவும் எளிமையாக கொண்டாடினர். மசூதிகள், பள்ளிவாசல்கள் திறக்கப்படாததால் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளின் ஹால்கள், மொட்டைமாடி போன்றவற்றில் குடும்பத்தினருடன் சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்தினர்.இதன்படி, நாகூர், நாகை, திட்டசேரி, திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் வீடுகளில் தங்கள் குடும்பத்தினரோடு ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

ரமலான் பண்டிகை காலங்களில் இஸ்லாமியர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும் உலக புகழ்பெற்ற நாகூர் தர்ஹா நேற்று பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. பூட்டப்பட்டு இருந்த நாகூர் தர்காவின் கால்மாட்டு வாசலில் இஸ்லாமியர்கள் சிலர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டுவர வேண்டி சமூக இடைவெளியுடன் அவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ரமலான் பண்டிகையில் நாகூர் தர்காவில் நடைபெறும் கூட்டு பிரார்த்தனை, தொழுகை, விளக்க உரை, துவா பாத்திஹா, உள்ளிட்ட நிகழ்வுகள் இல்லாமல் வீடுகளிலேயே இந்த ஆண்டு தொழுகை மேற்கொண்டது புதிய அனுபவத்தை கொடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரளாவைப் பின்பற்றி ஒரு நாள் முன்னதாகவே நேற்று முன்தினம் ரம்ஜான் கொண்டாடப்பட்டது. வளைகுடா நாடுகள் அனைத்திலும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தீவிரமான சமூக விலகலைக் கடைப்பிடித்துக் மக்கள் இப்பண்டிகையை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. இவற்றில் சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


Share this News: