விடுதலைக்கு தயாராகும் சசிகலா!

Share this News:

சென்னை (21 செப் 2020):சிறையில் உள்ள சசிகலா தனது அபராதத் தொகையை செலுத்த அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 1991-96ஆம் ஆண்டு ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சசிகலா, சுகாகரன், இளவரசி ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், ரூ.100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்த நீதிமன்றம், அபராதத் தொகையை செலுத்தாவிடில் மேலும் ஓர் ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

இந்த சூழலில், வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா காலமானதால், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களது தண்டனை காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், சசிகலா முன்னரே விடுதலையாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. ஆகஸ்ட் மாதமே சசிகலா விடுதலையாகி விடுவார் எனவும் கூறப்பட்டது. ஆனால், ஆகஸ்ட் மாதமும் ஓடிவிட்ட நிலையில், அவரது விடுதலை குறித்த தகவல் வெளி வராமல் இருந்தது. எப்படியும் எதிர்வரவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அவர் வந்து விடுவார் என்பதால், அவரது வருகை தமிழக அரசியல் களத்தில் ஒரு விவாதமாக கிளம்பியுள்ளது.

சசிகலா இந்த மாதம் விடுதலையாவார், அடுத்த மாதம் விடுதலையாவார் என அடுத்தடுத்து செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சசிகலாவின் விடுதலை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என்றும், அவரது அபராதத் தொகையை செலுத்தாத பட்சத்தில் 2022ஆம் ஆட்னு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி அவர் விடுதலை ஆகலாம் என்றும் தெரிவித்தது.

இதனிடையே, சசிகலாவின் சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளதால், இந்த அபராதத் தொகையை கட்டுவதற்கான வேலைகளில் சசிகலா தரப்பினர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. அக்டோபர் மாதம் அபராதத் தொகையை செலுத்திவிட்டால் விரைவில் சசிகலா வெளியே வந்துவிடுவார் என அவரது தரப்பினர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், சிறைத்துறையின் இந்த தகவல் அவர்களை சற்று ஏமாற்றமடைய செய்துள்ளது.

இருப்பினும், சசிகலா விடுதலை தொடர்பான பொதுவான கேள்விக்கே சிறைப் பதிவுகளின்படி அவரது விடுதலை ஜனவரி 27ஆம் தேதி என்று சிறைத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், அவர் அதற்கு முன்னரே விடுதலையாக வாய்ப்புள்ளது என்றும் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வழக்கமாக நடைமுறைகளின்படி, அபராதத் தொகையை செலுத்த அனுமதிக்க கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே, தனது அபராதத் தொகை ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் சுதாகரன் செலுத்தியுள்ள நிலையில், சசிகலாவும் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply