சாத்தான்குளம் சம்பவம் – இறந்தவர்களுக்கு சிகிச்சை மறுப்பு: வெளி வந்துள்ள பதற வைக்கும் தகவல்!

Share this News:

சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை எதிரில் செல்போன் கடை நடத்திவந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்தும் கடையைத் திறந்து வைத்ததுள்ளதாக் கூறி, போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சி மரணம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காவல்நிலையத்தில் போலீஸார் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் அரசு மருத்துவர் முறைப்படி பரிசோதனை செய்யாமல் ரிமாண்டுக்கு அனுப்ப எப்படிச் சம்மதித்தார் என்ற புகாரும் எழுப்பப்பட்டது. அத்துடன், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிய மாஜிஸ்திரேட் மற்றும் கிளைச் சிறையின் அலுவலர்கள் மீதும் குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் விவகாரத்தில் மருத்துவர்கள் தங்கள் பணியைச் சரிவரச் செய்யத் தயாராக இருந்தபோதிலும் போலீஸார் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து, தாங்கள் விரும்பியபடி சான்று பெற்ற விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சாத்தான்குளம் அரசு மருத்துவரான வெண்ணிலா என்பவர், இருவரின் காயங்களையும் பார்த்ததும் அவர்களை உடனே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை எடுக்க அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், போலீஸார் அவரிடம், ’இருவருக்கும் உடலில் காயம் இல்லை’ என எழுதிக் கொடுக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார்கள்.

போலீஸார் நெருக்கடி கொடுத்தபோதிலும் சாத்தான்குளம் மருத்துவர் சுமார் 3 மணிநேரமாகச் சான்று கொடுக்க மறுத்திருக்கிறார். தொடர் வலியுறுத்தல் காரணமாக நெருக்கடிக்கு உள்ளான நிலையில் அவர், போலீஸார் கேட்டதுபோன்று எழுதிக் கொடுத்துவிட்டார் என்கிறார்கள், மருத்துவமனை ஊழியர்கள். அதனால், மருத்துவர் தேவையில்லாமல் சர்ச்சை வலையில் சிக்கிக்கொண்டார் என்று மருத்துவமனையில் பணியாற்றுபவர்கள் வருத்தப்படுகிறார்கள்.

கோவில்பட்டி கிளைச் சிறையில் பொறுப்பில் இருந்த அழகர்சாமி என்ற காவலர், காயத்துடன் வந்த இருவரையும் உள்ளே எடுத்துக் கொள்ளத் தயக்கம் காட்டியிருக்கிறார். ஆனால், கிளைச் சிறையின் சப்-ஜெயிலரான சங்கர் போனில் அவரிடம் பேசிய பின்னரே இருவரும் சிறைக்குள் அனுமதிக்கப்பட்டதாகச் சிறைத்துறைக் காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் சிறைக்குள் அனுமதிக்கப்பட்ட பின்னரும் இருவருக்கும் உடல்நலம் சரியாகவில்லை. மிகவும் சோர்வுடன் இருந்த இருவரையும் அரசு மருத்துவர் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளைக் கொடுத்துள்ளார்.

அரசு மருத்துவரான வெங்கடேஷ், இருவரின் உடலில் இருந்த காயங்களைப் பார்த்ததும் அதற்குத் தேவையான சிகிச்சையைக் கொடுத்திருக்கிறார். அவர் இருவருக்கும் சுகர் மற்றும் பிரஷர் பரிசோதனையும் செய்துள்ளார்.

கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் மருத்துவரான வெங்கடேஷ், சிறையில் இருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரைப் பரிசோதனை செய்து எழுதிக் கொடுத்த பரிசோதனைச் சீட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அந்தப் பரிசோதனைச் சீட்டில், இருவருடைய உடலின் பின்பகுதியில் (புட்டம்) அதிக எண்ணிக்கையிலான காயத்தின் தடங்கள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இடது கால் மூட்டுப் பகுதியில் காயத்தின் தடம் இருந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஏற்கெனவே, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸாகப் பணியாற்றும் நபர் தன் நண்பரிடம், காவல்நிலையத்துக்கு அழைத்து வருபவர்களைச் சரமாரியாகத் தாக்குவது வழக்கமானதுதான் எனப் பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சையானது.

இந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மருத்துவச் சீட்டு வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. மருத்துவர் எழுதியதாக வெளியாகியிருக்கும் பரிசோதனைச் சீட்டு உண்மையானது தானா என்பது குறித்து அறிய டாக்டர். வெங்கடேஷைத் தொடர்பு கொண்டோம்.

நம்மிடம் பேசிய அவர், “சிறைச்சாலையில் இருப்பவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் என்னை அழைப்பார்கள். அதன்படி நான் சிறையில் இருந்தவர்களைப் பரிசோதிக்கச் சென்றபோது இருவரின் பின்பக்கதிலும் அடிபட்டதற்கான தடம் இருந்தது. கால் மூட்டிலும் காயம் இருந்தது.

இருவரும் அவர்களாகவே நடந்துவந்து பரிசோதனை செய்து கொண்டார்கள். ஜெயராஜுக்கு உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தது. பென்னிக்ஸுக்கு ரத்த அழுத்தம் இருந்தது. இருவருக்கும் அதற்கான மருந்து மாத்திரைகளைக் கொடுத்துவிட்டு வந்தேன். ஸ்கேன், இ.சி.ஜி எடுக்க அழைத்து வருமாறு சிறைகாவலர்களிடம் தெரிவித்து விட்டு வந்தேன்.

அவர்கள் இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது நான் அங்கு இருக்கவில்லை. அதனால் அதுபற்றி எனக்குத் தெரியாது. நான் எழுதிக் கொடுத்த மருத்துவச் சீட்டுகள் எல்லாம் மாஜிஸ்திரேட் விசாரணையில் இருக்கிறது. அதனால் அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்று முடித்துக்கொண்டார்.

நன்றி: விகடன்


Share this News: