ஜெலட்டின் குண்டு வெடித்து சிறுவன் பலி – திருச்சி அருகே பயங்கரம்!

480

திருச்சி (11 ஜூன் 2020): திருச்சி அருகே ஜெலட்டின் குச்சியை தின்பண்டம் என நினைத்து கடித்த சிறுவன் அது வெடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அலகரைப் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி மகன் விஷ்னுதேவ்(6). பூபதியின் அண்ணன் கங்காதரன். இந்நிலையில் கங்காதரன் வீட்டுக்கு பூபதி மற்றும் விஷ்னுதேவ் ஆகியோர் சென்றுள்ளனர். அங்கு ஜெலட்டின் குச்சி இருந்ததை பார்த்த விஷ்னு தேவ் அதனை ஏதோ தின்பண்டம் என நினைத்து கடித்துள்ளார். அது வெடித்து வாய் சிதறி விஷ்னுதேவ் கீழே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

உடனே விஷ்னு தேவை தந்தை பூமதி மற்றும் விஷ்னுதேவின் பெரியப்பா கங்காதரன் ஆகியோர் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் விஷ்னு தேவ் உயிரிழந்தார். இதை மறைத்து சிறுவனின் உடலை அடக்கம் செய்து விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி டிஎஸ்பி செந்தில்குமார், ஜெலட்டின் குச்சியை வைத்திருந்த சிறுவனின் பெரியப்பா கங்காதரன், அவருடைய உறவினர் மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின்போது, பூபதியின் அண்ணன் கங்காதரன் ஆற்றில் மீன் பிடிப்பதற்காக பாறைகளை உடைக்கப் பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகளை வாங்கி பயன்படுத்தியுள்ளார். மீதமிருந்த ஒரு ஜெலட்டின்குச்சியை தனது வீட்டில் வைத்துள்ளார். அதனை விஷ்னுதேவ் தவறாக எடுத்து கடித்தால் வெடித்ததாக கூறப்படுகிறது. எனினும் ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்துவதற்கு வேறு காரணங்கள் உள்ளனவா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விவகாரம் திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.