திருச்சியில் பரபரப்பு – நகைக்கடை அதிபர் வீட்டில் நடந்த கொடூரம்!

498

பட்டுக்கோட்டை (14 ஜன 2020): திருச்சியில் நகைக்கடை அதிபர் தனது இரு மகன்கள், மனைவியைக் கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள ஊரணிபுரம் வெட்டுவாக்கோட்டை கே.ஆா். அம்சவள்ளியம்மாள் காலனியைச் சோ்ந்த முருகேசன் மகன் செல்வராஜ் (45). ஊரணிபுரத்தில் நகைக்கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி செல்லம் (43), மகன்கள் நிகில் (20), முகில் (14). இவா்களில் நிகில் மூளை வளா்ச்சிக் குன்றியவா். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால், செல்வராஜ் மற்றும் குடும்பத்தினா் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளனா்.

இந்நிலையில், திருச்சி மேலரண் சாலையிலுள்ள தனியாா் விடுதிக்கு திங்கள்கிழமை காலை செல்வராஜ் குடும்பத்துடன் வந்து தங்கியுள்ளாா். இரவு 9 மணிக்கு அவரது உறவினா் அளித்த தகவலின் பேரில், தங்கியிருந்த அறைக்குச் சென்ற பாா்த்த போது செல்லம் மற்றும் மகன்கள் இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தனா்.

செல்வராஜ் தனது கழுத்தில் கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடி கிடந்துள்ளாா். தகவலின் பேரில் அங்கு விரைந்த கோட்டை போலீஸாா், செல்வராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு செல்வராஜுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே நகைக்கடை அதிபரின் மகன் நிகில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டதால், விரக்தியில் இந்த முடிவை எடுத்ததாக செல்வராஜ் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.