ஆளுநர் தனது கடமையை செய்ய தவறிவிட்டார் – முதல்வர் ஸ்டாலின்!

Share this News:

சென்னை (05 பிப் 2022): தமிழக ஆளுநர் அரசியலமைப்பு விதிப்படி தனது கடமையை செய்யவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குக் கோரும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் துவங்கியது.

இதில் 10 கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து கட்சியினருடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நீட் விலக்கு தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ”நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநரிடம் நேரில் சென்று வலியுறுத்தினோம். ஒவ்வொரு மாநிலமும் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என ஏற்கெனவே மத்திய உயர்கல்வித்துறை கூறியுள்ளது.

நுழைவுத்தேர்வை ஒழிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு ஏற்கெனவே ஜனாதிபதி ஒப்புதல் அளித்திருந்தார். நீதிமன்றமும் உறுதி செய்தது. நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் உள்ளோம். இதனால்,நீட் விலக்கு மசோதா முன்னதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

இந்த நீட் விலக்கு மசோதா 8 கோடி மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஆனால், அரசியலமைப்பு விதிப்படி தமிழக ஆளுநர் தனது கடமையை செய்யவில்லை. எனவே,சமூகநீதி போராட்டத்தை முன்னெடுக்கவே அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது” என்றார்.


Share this News:

Leave a Reply