முதல்வர் ஸ்டாலின் பயணித்த சொகுசு ரெயில் பெட்டி – கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Share this News:

சென்னை (08 டிச 2022):: தென்காசி சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் பயணம் செய்யும் சொகுசுகள் நிறைந்த ரயில் பெட்டி கவனம் ஈர்த்துள்ளது.

தென்காசியில் நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

தென்காசி மாவட்டம் உதயமான பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக பங்கேற்கும் அரசு விழா நடைபெறுகிறது.

தென்காசியை அடுத்த இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (8-ம் தேதி) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இவ்விழாவில் பங்கேற்க நேற்று இரவு சென்னை எழும்பூரில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தென்காசிக்கு புறப்பட்டார். அவரின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கேஎன் நேரு, ஐ.பெரியசாமி போன்றோர் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.

முன்னதாக, முதல்வரின் ரயில் பயணத்துக்காக பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சலூன் கோச் எனப்படும் சிறப்பு பெட்டி இணைக்கப்பட்டிருந்தது. ரயிலின் கடைசிப் பெட்டியாக இணைக்கப் பட்டிருந்த இது நகரும் வீடு என்று அழைக்கப் படுவதுண்டு. ஆம், சொகுசுகள் நிறைந்த கோச் என்பதால் அவ்வாறு அழைக்கப் படுகிறது.

சலூன் (கோச்) பெட்டியின் சிறப்பு அம்சங்கள்: இந்திய ரயில்வே இந்த சொகுசு பெட்டியை உயர் பதவியில் இருப்பவர்களுக்காகவே உருவாக்கி உள்ளது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர், முதலமைச்சர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் விமானம் மூலம் செல்ல முடியாத இடங்களுக்கு செல்வதற்காகவே இந்தப் பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது. நட்சத்திர சொகுசு ஓட்டலில் உள்ளதுபோல் பல்வேறு வசதிகள் இதிலும் உண்டு.

பாத்ரூம் வசதியுடன் கூடிய 2 பெட்ரூம், பெரிய ஹால், டைனிங் டேபிள், சோபா, சமையலறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இதில் அடக்கம். குறிப்பாக, சமையலறையில் தேவையான பாத்திரங்கள், சுடுநீர், குளிர்சாதன பெட்டி சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் போன்றவை பொருத்தப் பட்டிருக்கும்.

அதுமட்டுமில்லாமல் எப்போதும் ரயிலின் கடைசி பெட்டியாக இது இணைக்கப்படும். காரணம், இப்பெட்டியின் பின்புறம் இருக்கும் கண்ணாடி ஜன்னல் மூலமும் இயற்கை அழகை ரசித்துக்கொண்டே பயணிக்க முடியும். தொந்தரவு இல்லாத பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தப் பெட்டி தயாரிக்கப் பட்டுள்ளது.

உயர் பதவியில் இருப்பவர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் இந்த சிறப்பு வாய்ந்த சொகுசு பெட்டியில் பயணிக்க முடியும். பொதுமக்கள் இதில் பயணம் செய்ய விரும்பினால் ரூ.2 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்திய ரயில்வேயிடம் மொத்தம் 336 சலூன் கோச்கள் உள்ளன.

இப்படிப்பட்ட சிறப்புமிக்க சொகுசுமிக்க சலூன் பெட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்து வருவதால், கூடுதல் கவனம் பெறத் தொடங்கியுள்ளது.


Share this News:

Leave a Reply