செய்தியாளர்களிடம் பேசியதை ஏன் தீர்மானமாக்கக் கூடாது? – ஸ்டாலின் சரமாரி கேள்வி!

Share this News:

சென்னை (14 மார்ச் 2020): “என்பிஆர் இப்போதைக்கு செயல்படுத்தப்போவதில்லை என்று அமைச்சர் உதயகுமார் கூறியதை ஏன் சட்டசபையில் தீர்மானமாக்கக் கூடாது?” என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

சட்டபேரவை நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் என்.பி.ஆர் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று கூறியது சட்டசபையில் விவாதமானது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பிஉதயகுமார், “செய்தியாளர்களிடம் எந்த புதிய திட்டங்களையும் அறிவிக்கவில்லை. என்.பி.ஆரை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுபான்மையினரிடையே பதட்டமான சூழல் ஏற்படுத்தும் விதமாக எதிர்கட்சியினர் பொய்யான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். ஆகையால் என்.பி.ஆரின் உண்மை நிலையை செய்தியாக ஊடகத்திடம் வெளியிட்டேன். அவையில் பேசிய கருத்தைத் தான் செய்தியாக வெளியிட்டேன்” என்றார்

இதைத் தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், “என்.பி.ஆர் பணிகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சரத்துக்கள் குறித்து மத்திய அரசிடமிருந்து விளக்கம் வராததால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விளக்கம் வந்தால்தான் முடிவெடுக்கப்படும் என்று அறிவித்த அதை ஏன் சட்டபேரவையில் தீர்மானமாகக் கொண்டு வரக்கூடாது?” என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “மத்திய அரசு இயற்றியுள்ள ஒரு சட்டத்துக்கு விரோதமாக ஒரு தீர்மானத்தை எப்படிக் கொண்டு வர முடியும்? அப்படிக் கொண்டுவரும் பட்சத்தில் அத்தீர்மானம் செல்லுபடி ஆகாது. என்.பி.ஆர் பணிக்கு எந்த ஆவணமும் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். ஆகையால் இல்லாத ஒன்றை மக்களிடம் எடுத்துரைக்கும் போது அதனை தெளிவுபடுத்துவது அரசின் பொறுப்பு’ என்று தெரிவித்தார். இந்த விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர், பொதுமக்களிடத்திலும் சிறுபான்மையினரிடத்திலும் எதிர்கட்சிகள் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன. மேலும், இதனைக் காரணம் காட்டி மாநில அரசு மத்திய அரசிடம் பணிந்துள்ளது என்றும் அனைவரும் சிறைக்கு சென்று விடுவார்கள் என்றும் கூறுகின்றனர். எந்தக்காலத்திலும் இது நடக்கவே நடக்காது. உண்மை நிலையினை எடுத்துரைப்பது அரசின் கடமை. போராட்டத்தைத் தூண்டும் போக்கில் எதிர்க்கட்சிகள் செயல்படும் பட்சத்தில், பதட்டமான சூழல் தணிக்கும் நோக்கில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்” என்று ஆவேசமாக பதில் அளித்தார்.

மேலும், 2003-ல் மத்திய அரசு என்.பி.ஆரைக் கொண்டு வந்து அதில் சில சரத்துகளைச் சேர்க்கலாம், நீக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளது. இதன் விளைவாகவே தற்போது சில சரத்துக்களை மத்திய அரசு சேர்த்துள்ளது. அதற்கான விளக்கத்தைக் கேட்டே தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. ஆகையால் அச்ச உணர்வை போக்குவது அரசின் கடமை என்றார்.

மீண்டும் பேசிய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சரின் விளக்கத்தை நான் வரவேற்கிறேன். இதனை தீர்மானமாக அரசு கொண்டு வருமா? அல்லது என்.ஆர்.பி பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்ற செய்தியை அமைச்சர் அவையில் பதிவு செய்வாரா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மத்திய அரசின் விளக்கம் வரும் வரை என்.பி.ஆரின் பணிகள் தொடங்கப்பட்டமாட்டாது என்று தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply