மேலும் ஒரு மாணவி பள்ளி விடுதியில் தற்கொலை!

425

திருவள்ளூர் (25 ஜூலை 2022): திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியில் +2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி அருகேயுள்ள தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த மாணவி, கீழச்சேரியில் செயல்படும் ஒரு அரசு உதவிபெறும் பள்ளி விடுதியில் தங்கி +2  படித்துவந்தார். இன்று காலை வழக்கம்போல பள்ளிக்கு கிளம்பிய மாணவி, உடன் இருந்த மாணவர்கள் காலை உணவு அருந்தச் சென்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து பள்ளி நிர்வாகம் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி மாணவியின் உறவினர்கள் கீழச்சேரி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மப்பேடு காவல்துறையினர் மற்றும் மாவட்டக் காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் கீழச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.