நீட் தேர்வில் வெற்றி பெற்றும் வீண் – மருத்துவ படிப்பில் இடமில்லை!

285

விழுப்புரம் (07 நவ 2020): நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மாணவிக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தாய் தமிழ்ப் பள்ளி சுயநிதிப் பள்ளியாக இயங்கிவருகிறது. இந்த பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை இலவசமாக கல்வி பயின்ற மாணவி சந்திரலேகா, அருகிலுள்ள முருங்கம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை பயின்றுள்ளார். 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளிலும் மாணவி சந்திரலேகா பள்ளியளவில் முதல் மாணவியாகவும் தேர்ச்சிபெற்றார்.

பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவி சந்திரலேகா, 12ம் வகுப்பில் 471 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அரசு நீட் பயிற்சி மையத்தில் படித்த அவர், 155 மதிப்பெண் பெற்று திண்டிவனம் அளவில் இரண்டாவது இடத்தையும் மாவட்ட அளவில் 52வது இடத்தையும், மாநில அளவில் 271வது இடத்தையும் பெற்றார்.

இதைப் படிச்சீங்களா?:  மெதுவாக நகரும் நிவர் புயல் - கரையை கடப்பதில் தாமதம்!

நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு 6வது வகுப்பிலிருந்து அரசுப் பள்ளியில் கல்வி பயின்றிருக்க வேண்டும் அல்லது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சுயநிதி பள்ளியில் பயின்றிருக்க வேண்டும்.

இந்நிலையில், சுயநிதி பள்ளியில் படித்த மாணவி சந்திரலேகாவுக்கு மருத்துவ இடம் மறுக்கப்பட்டுள்ளது. அரசிடமிருந்து 25 சதவீத சலுகை பெற்று இயங்கும் சுயநிதி பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு பொருந்தும் என்ற விதி உள்ளதால் அதனை திருத்தி இந்த மாணவிக்கு மருத்துவ இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.